சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெறும் நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் தேர்தல் திட்டம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் ஏப்.10ம் தேதி மும்பையில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஏப்.18) நடைபெறவிருக்கும் நிலையில், ஓட்டு போடுவதற்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மும்பையில் இருந்து நாளை காலை சென்னை வருகிறார். தனது வாக்கை பதிவு செய்த பின் மீண்டும் தர்பார் ஷூட்டிங்கிற்காக மும்பை செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ‘பாகி 2’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் பிரதீக் பாபரின் நடிப்பு பிடித்துவிட்டதால், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பிரதீக் பாபரை தர்பாரில் நடிக்க வைக்க முடிவு செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இது பற்றி நமக்கு கிடைத்த தகவலின்படி, தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பாபர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், இதற்கான ஆடிஷன் நடைபெற்றதாகவும், அதில் பிரதீக் பாபர் பங்கேற்றது உண்மை தான் என்றும், இன்னும் வில்லன் நடிகருக்கான தேர்வு நிறைவடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
‘பேட்ட’ திரைப்படத்தை போல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.