Santhosh Narayanan Spl - ''நெருப்புடா பாடலுக்கு முன்னர் அபாய ஒலி ஒன்று ஒலிக்கும்..அதுதான்..''
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவையும் இசையையும் இரண்டாக பிரித்தவிட முடியாது. பாகவாதர் காலம் முதல் பார்ட்டி சாங் வரை, தமிழ் சினிமா பாடல்களால் நிரம்பியிருக்கிறது. அத்தகைய இசையை நமக்கு கொடுக்க ஒவ்வொரு இசையமைப்பாளர் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. அவர்களை எப்போதுமே நம் தமிழ் சமூகம் கொண்டாடி வந்திருக்கிறது. அப்படியான தமிழ் இசையமைப்பாளர்களில் தனக்கென ஒரு தனி இடத்தை அடைந்திருக்கும் சந்தோஷ் நாராயணன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் அவரது இசை பயணத்தை கொஞ்சம் விசிட் அடிக்கலாம் வாருங்கள்.
2012-ஆம் வருடம். தமிழ் சினிமாவில் ஷார்ட் ஃபிலிம் அலையடிக்க, அதில் பல புது இயக்குநர்கள் வந்தார்கள். அவர்களோடு சேர்ந்து புதிய இசையுடன் ஒருவர் களத்திற்கு வந்தார். அவர்தான் சந்தோஷ் நாராயணன். அட்டக்கத்தி படத்தில் அந்த புறநகர் பகுத்திக்கே உண்டான இசையோடும் கானாவோடும் கலக்கிய இவர், அடுத்த பிட்சாவில் ஹாரர் இசையில் புதுமை காட்டி மிரட்டினார். தொடர்ந்து சூது கவ்வும் படத்தில் கமர்ஷியல் ஏரியாவுக்கான இசையை புதிய பரிமாணத்தில் கொடுத்து கவனத்தை ஈர்த்தார். இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களாக அறியப்படும் பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி இவர்களின் முதல் படத்திற்கு தனது புதுமையான இசையை கொடுத்து, படத்துக்கு மிகப்பெரிய பலமான நின்றார் சந்தோஷ் நாராயணன். வழக்கமான ட்ரென்ட்களுக்குள் இல்லாமல், புதுமையான இசைக்கருவிகள், வித்தியாசமான வாய்ஸ் என சந்தோஷ் நாராயணன் தனித்து தெரியும் அவரது சக்சஸ் ஃபார்முலாவாக இப்படிதான் ஆரம்பித்தது.
அடுத்து 2014-ல் குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ். இந்த மூன்று படங்களின் பின்னணி இசை மற்றும் பாடல்களின் மூலம் சந்தோஷ் தமிழ் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் ஆனார். குறிப்பாக மெட்ராஸ் படத்தின் பின்னணி இசைக்காக மட்டும் அவருக்கு ஆயிரம் முத்தங்களை பரிசாக கொடுக்கலாம். பெருமாளை கொன்று விட்டு, அன்புவும் காளியும் ஓடி வருவார்கள். அப்போது காளி ஒரு நொடி அந்த சுவரையும், அதிலிருக்கும் ஓவியத்தை பார்ப்பான். அப்போது சந்தோஷின் பின்னணி இசை, காளிக்கு மட்டுமல்ல நமக்கும் ஒரு பெரும் மரண ஓலத்தையும் பயத்தையும் கொடுப்பது போல அமைந்திருக்கும். அந்த களத்திற்கு தேவையான இசையை, அதன் மனத்துடன் கொடுப்பதில் சந்தோஷ் நாராயணன் தரமான சம்பவக்காரர். புதுமுக இயக்குநர்கள், வித்தியாசமான படங்கள் என்றிருந்த சநா, கபாலியில் ஷேவாக் ஸ்டைலில் ஒட்டுமொத்தமாக அடித்து துவம்சம் செய்தார். நெருப்புடா பாடலுக்கு முன்னர் அபாய ஒலி போல எழும் அந்த இசைதான், அவரின் அசுர பாய்ச்சலுக்கான அறிவிப்பு ஒலி. கபாலி பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதே நேரத்தில் வானம் பார்த்தேன், மாயநதி என தன் சிக்னேச்சர் முத்திரையை பதிப்பதிலும் அவர் கில்லி. பைரவா, கொடி, காலா என ஹீரோக்களுக்கான மாஸ் இசையையும் சந்தோஷ் நாராயணன் கொடுத்து, ஆல் பாக்ஸையும் டிக் அடித்து அசத்தினார்.
சந்தோஷ் நாராயணனின் மற்றுமொரு மைல்கல் என்றால், அது வடச்சென்னை. ஏற்கனவே மெட்ராஸ் படத்தில் அப்படியான களத்திற்கு இசையைத்துவிட்டார். மீண்டும் அதே கானா, லவ் சாங் தான். அனால், கொஞ்சம் கூட மெட்ராஸின் எந்த சாயலும் இல்லாமல், வடச்சென்னை இசையை அனைவராலும் ரசிக்கும்படி மாயாஜாலம் செய்தார் இவர். மாடில நிக்குற மான்குட்டி பாடல் எல்லாம் ப்யூர் சநா மெட்டிரீயல். பரியனின் வலியை அழுத்தமாக பேசிவிட்டு, ஏ1 படத்தில் பக்கா ஜாலியான கானா பாடிவிட்டு, ஜிப்ஸியில் போராளியின் குரலாக ஒலிப்பது எல்லாம் சந்தோஷ் நாராயணனுக்கு உரித்தான ஸ்டைல். இந்நேரம் கொரோனா வைரஸ் வராமல் இருந்திருந்தால், ஜகமே தந்திரத்தின் மூலம் ரக்கிட ரக்கிட என நமது ஸ்பீக்கர்களை அலற விட்டிருப்பார். அதே தனுஷுக்கு இதில் ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் இசையை கொடுத்தவர், மாரி செல்வராஜின் கர்ணனில் மண் மனம் மாறாத இசையை தனது ஸ்டைலில் தெறிக்க விட போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இன்னும் தமிழ் இசையில் பல புதுமையான முயற்சிகளுடன், நமது அத்தனை உணர்வுகளுக்கும் தீனி போடும் உலகத்தர இசையை நீங்கள் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். நாங்கள் கேட்டு கொண்டே இருக்க வேண்டும். பிறகு, உங்கள் பாடல்கள் இல்லாத காட்டில், நாங்கள் எப்படிதான் திரிவது..?!! - பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தோஷ் நாராயணன்.