கங்கனா ரனாவத் நடிக்கும் ‘தலைவி’-க்காக புதிய கெட்டப்பில் அசத்தும் அரவிந்த்சாமி!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 14, 2019 04:17 PM
இயக்குநர் விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் ‘தலைவி’ திரைப்படத்திற்காக நடிகர் அரவிந்த்சாமி வைத்திருக்கும் லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழில் கடந்த 2008ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.
விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘பகுபலி’, ‘மணிகர்னிகா’ உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்.
இந்நிலையில், நடிகை கங்கனா, இப்படத்தில் 4 வித்தியாசமான வயதுடைய தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும், அதற்காக ஹாலிவுட் மேக்-அப் ஆர்ட்டிஸ்ட் ஜேசன் காலின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த நவ.10ம் தேதி தொடங்கியதை தயாரிப்பாளர் விஷ்ணு இந்துரி தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி, க்ளீன் ஷேவ் செய்து ஸ்மார்ட் லுக்கில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ‘தலைவி’ என்ற தலைப்பில் வெளியாகும் என தெரிகிறது.