"எதிர்வினைக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும்" கருத்து தெரிவித்த கமலுக்கு நன்றி - சூர்யா!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 18, 2019 10:12 AM
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்ளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த தமிழிசை, எச்.ராஜா மற்றும் அ.தி.மு.க.அமைச்சர்கள் சிலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்
இந்நிலையில் சூர்யாவின் பேச்சு குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ/மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காகத் தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள்.
எனவே கல்வி குறித்து பேசுவதற்காக உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கின்றது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு' என்று குறிப்பிட்டிருந்தார்.
கமலின் இந்த ஆதரவுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் கல்விக் கொள்கை தொடர்பான எனது கருத்துக்கு வந்த எதிர்வினைக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்த தங்களுக்கும் மக்கள் நீதி மய்யம் அமைப்புக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.