‘பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி வரும்’ - சூர்யா குறித்து நடிகர் சத்யராஜ் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 23, 2019 03:16 PM
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா இன்று (ஜூலை.23) தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், நடிகர் சத்யராஜ் சூர்யாவின் சமூக அக்கறையை பாராட்டி, பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தனது விடா முயற்சியால் நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தை உடைத்து, நடிகர் சூர்யா என்று தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். அதைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த சூர்யா, படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி தனது தனித்துவத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
நடிப்பு மட்டுமின்றி சமூக அக்கறையிலும் ஈடுபாடு காட்டி வரும் சூர்யா, கடந்த 2008-ம் ஆண்டு அகரம் பவுன்டேஷன்ஸ் என்ற தொண்டு அமைப்பை நிறுவி அதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்வி செலவை ஏற்று வருகிறார். சமீபத்தில், நீட் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சூர்யா சில கேள்விகளை முன்வைக்க, அது அரசியல் களத்தில் கடுமையான விவாதத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘சூர்யா பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒரு வயது குழந்தையில் இருந்து உன்ன தூக்கி கொஞ்சி இருக்கேன். பல பிறந்தநாளுக்கு போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து கூறியிருக்கிறேன். ஆனால் இம்முறை சமூக வலைதளங்களின் மூலமாக வாழ்த்துக் கூறுகிறேன்’.
‘இந்த பிறந்தநாளைக்கு உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன். சமூக நீதிக்காக நீ கொடுத்த குரல் வரவேற்கத்தக்கது. நமக்கு ஏன் வம்பு என்று இல்லாமல் நீ குரல் கொடுத்திருக்கிறாய். மாஸ் ஹீரோவாக இருந்து குரல் கொடுப்பது அவ்வளவு எளிதல்ல. பல சங்கடம், பல எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். கல்விக்காக குரல் கொடுத்ததில் பெருமை. மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக இறங்கி அலசி ஆரய்ந்து பதிவு செய்திருக்கிறார். வயதில் பெரியவன் என்பதால் வாழ்த்துகிறேன், உனது துணிச்சலை வணங்குகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
@Suriya_offl Heartfelt wishes from Appa and our entire family anna!🙏🏻 #HappyBirthdaySURYA pic.twitter.com/igqGTne4oY
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) July 23, 2019