#HBDJanaki - இந்த 5 பாட்டுல இளையராஜா - ஜானகி கூட்டணியை அடிச்சுக்கவே முடியாது.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று கந்தர்வ கான குரலிசைக்கு சொந்தக்காரரான பாடகி எஸ்.ஜானகிக்கு பிறந்தநாள். 80-களின் இளையராஜா காலம் தொடங்கி தற்போது 96 படம் வரை, ஜானகியும் அவரது பாடல்களும் நம் வாழ்வோடு கலந்து பயணிக்கின்றன. அப்படி அவரது இசை வாழ்க்கையில், இளையராஜா இசையில் கொடுத்த ஹிட் பாடல்கள் ஏராளம். அதிலும் இருவரும் சேர்ந்து பாடினால், அந்த பாடலை சூப்பர் ஹிட் என ரெக்கார்டிங்கிற்கு முன்பே அறிவித்துவிடலாம். இருவரின் இசையும் குரலும் ஒரே சேர கலந்து, ஒரு உன்னதமான உணர்வை நமக்குள் கடத்திவிடும். அப்படி இருவரும் சேர்ந்து பாடிய பாடல்களில், மிகச்சிறப்பாக அமைந்த டாப் 5 பாடல்கள் இதோ.

இளையராஜா - ஜானகியின் டாப் 5 பாடல்கள் | here is the top 5 songs of ilayaraja and s janaki combination

நான் தேடு செவ்வந்தீ பூ இது

கார்த்திக், ஜீவிதா நடித்த தர்மபத்தினி படத்தில் இடம் பெற்ற பாடல் இது. பாடல் முழுக்கவே பெரிதான high points எல்லாம் கொண்டு போகாமல், ஒரு பேருந்தில் சீரான வேகத்தில் பயணிப்பது போன்ற மெட்டை கொடுத்திருப்பார் இளையராஜா. அதற்கேற்ப இருவரும் பாடி இருப்பார்கள். பூவோ இது வாசம் என இளையராஜா தன் குரலில் மயக்கினால், போவோம் இனி காதல் தேசம் என ஜானகி அவர் குரலில் நம் சிறகுகளை விரிக்க செய்வார். இளையராஜாவின் மகனான யுவன்ஷங்கர் ராஜா, அப்பாவின் இசையில் பிடித்த பாடலாக இதைதான் தேர்வு செய்திருக்கிறார். ஆம் யுவனுக்கு மட்டுமில்லை, எண்ணற்ற இளையராஜா-ஜானகி ரசிகர்களுக்கு இந்த பாடல் தனி ஃபேவரைட் தான்.

பூமாலையே தோல் சேரவா

மணிரத்னம் இயக்கிய பகல் நிலவு படத்தில் இடம்பெற்ற பாடல் இது. கார்த்திக், ரேவதி நடித்த இப்படத்திற்கு இளையராஜா சூப்பர் இசையை வழங்கியிருப்பார். இதில் ஆரம்பித்த இளையராஜா-மணிரத்னம் காம்பினேஷன் தளபதி வரை கொடிகட்டி பறந்தது தனிக்கதை. இந்த பாடலில்  ஒரு காதல் பாடலுக்கு மேற்கத்திய பாணியிலான பீட்களை வழங்கியிருப்பார் இளையராஜா. அதே நேரத்தில் வீணையில் புகுந்து க்ளாசிக்கல் விளையாட்டையும் செய்திருப்பார் இசைஞானி. குறிப்பாக இளையராஜாவும் ஜானகியும் பாடும் போது, வரிகள் ஒவ்வொன்றும் நதி போல் இயல்பாக ஓடி வரும். அது இந்த பாடலில் 100 சதவீதம் சாத்தியமாகியிருக்கும். மேலும் சில இடங்களில் இளையராஜா பாடும் போது ஜானகி கோரஸில் பாடுவது போல் ஒரு மேஜிக்கை நிகழ்த்தியிருப்பார் ராஜா.

சங்கத்தில் பாடாத கவிதை

இந்த பாடல் விஜயகாந்த், காயத்ரி நடித்த ஆட்டோ ராஜா படத்தில் இடம்பெற்றது. இப்பாடலை இளையராஜா  பாலுமகேந்திராவுக்காக இசையமைத்த தும்பத்தில் பாடலை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியிருப்பார். அதற்கு ஜானகியின் குரல் மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் அமைந்திருக்கும். இளையராஜா பல ஸ்டைல்களில் புகுந்து விளையாடுபவர். இருந்தும் க்ளாசிக் பாடல்கள் மேல் அவருக்கு தனி விருப்பம்தான். அப்படியான டச்சை அவர் இப்பாடலில் கொடுத்திருப்பார். மேலும் அந்த ராகத்திற்கு பொருந்தியது போல, high pitch-களில் ஜானகி விளையாடியிருப்பார். மிகத்தேர்ந்த இரு சிற்பிகள் வடித்த சிலையை போல இப்பாடலை இளையராஜாவும் ஜானகியும் மெருகேற்றினார்கள்.

அடி ஆத்தாடி

கடலோர கவிதைகளையும், சின்னப்ப தாஸ் (சத்யராஜ்) மற்றும் ஜெனிபர் டீச்சரையும் (ரேகா)  யாரால் மறக்க முடியும். அடி ஆத்தாடி பாடல் ஒலிக்காத ரேடியோ தமிழகத்தில் இல்லை எனலாம். அப்படி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல் இது. இதில் ஜானகியின் குரல், வெறுமனே ரசிப்பதாக மட்டுமல்லாமல், படம் முழுக்க டீச்சர் கதாபாத்திரம் நமக்குள் ஏற்படுத்திய தாக்கத்திற்கு ஏற்றது போல அமைந்திருக்கும். அப்படி ஒரு கதாபாத்திரத்தை தன் குரலால் நிலை நிறுத்தியிருப்பார் ஜானகி. இருவரும் பக்காவாக பாடி அசத்திய இந்த பாடலை, இன்னும் அழகாக படமாக்கி அசத்தியிருப்பார் பாரதிராஜா. கடல் காற்றோடு கலந்து இளையராஜாவின் இசையும் ஜானகியும் குரலும் இந்தப் பாடல் மனதை உருக்கி காலத்தில் நின்று  நிலைபெற்ற இன்னுமொரு தேவகானம்.

தென்றல் வந்து தீண்டும் போது

இந்த பாடலை தவிர்த்துவிட்டு இளையராஜாவையும் ஜானகியையும் பற்றி எழுதிவிட முடியாது. 80-ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை தென்றல் வந்து தீண்டும் போது பாடலுக்கு அடிமைகள் எனலாம். எத்தனை காலம் ஆனாலும் அழியாத நினைவாக நீடிக்கிறது இப்பாடல். பாடல் காட்சியில் குழைந்து வரும் வண்ணத்தை போல, இருவரின் குரலும் இப்பாடலில் கலந்திருக்கும். எப்போதுமே ஜானகியின் குரலில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். அந்த குழந்தைத்தனமும் கண் தெரியாத ரேவதி முகமும் இந்த பாடலின் வழியே நமக்குள் ஏற்படுத்தும் உணர்ச்சியின் வீரியம்தான் இத்தனை ஆண்டுகள் கடந்தும் தென்றல் வந்து தீண்டும் போது பாடலின் வெற்றி.

இப்படி இன்னும் எத்தனையோ பாடல்களை இந்த ஜோடி நமக்கு கொடுத்துள்ளது. டவுன் பஸ் முதல் எஃப்.எம்.ரேடியோ வரை, இளையராஜா - ஜானகி பாடல்கள் இல்லாமல் ஒருநாளும் ஓடியதில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.  மறுபடியும் இந்த கூட்டணியில் ஒரு பாடல் வந்தால், ஒட்டுமொத்த தமிழ் இசை ரசிகர்களுக்கும் அது பெரிய விருந்துதான்.

என்றென்றும் காந்தர்வ கான குரலிசை கொண்ட எஸ்.ஜானகி அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Entertainment sub editor