'அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு...' '131 பேருக்கு அண்ணா பதக்கங்கள்...' - தமிழக முதல்வர் உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி தமிழக அரசு இன்று(14-09-2020) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாகவும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் விதமாகவும், ஒவ்வொரு ஆண்டும் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று(செப்டம்பர்-15) தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில்பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டும், காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலைக் காவலர் வரையிலான 100 அதிகாரிகள் முதல் பணியாளர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் துணை இயக்குநர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அதிகாரிகள் முதல் பணியாளர்களுக்கும், சிறைத்துறையில் உதவி சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அதிகாரிகள், பணியாளர்களுக்கும், ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் ஊர்க்காவல் படை வீரர் வரையிலான 5 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அதிகாரிகள் முறையே உதவி இயக்குநர், அறிவியல் அலுவலர் ஆகியோருக்கு அவர்களின் அர்பணிப்புமிகு பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள்” வழங்கிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டுள்ளார். பதக்கங்கள் பெறுகின்றவர்களுக்கு அவரவர் தம் பதவிக்கேற்றவாறு, பதக்க விதிகளின்படி வெண்கலப் பதக்கம் மற்றும் ஒட்டுமொத்த மானியத் தொகையும் அளிக்கப்படும்.
தமிழக முதல்வரின் வீரதீரச் செயலுக்கான தீயணைப்புத் துறை பதக்கம், ஆகஸ்டு-15 அன்று திருநெல்வேலி சேவியர் காலனியில் உள்ள 70 அடி உயர மாநகராட்சி நீர்த்தொட்டியின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற S.கணேசன் (45) என்பவரைக் காப்பாற்றியதற்காக, பாளையம்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தைச் சார்ந்த S.வீரராஜ், நிலைய அதிகாரி மற்றும் S.செல்வம், தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்பு வீரர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் பணம் வழங்கப்படும். பின்னர் நடைபெறும் விழா ஒன்றின் மூலமாக, பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இப்பதக்கங்களை வழங்குவார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
