‘சச்சின்கிட்ட பேசினேன்.. அவர் சொன்ன வார்த்தை’.. ஓய்வு குறித்து பிரபல வீரர் உருக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Mar 25, 2019 02:09 PM
ஐபிஎல் தொடரின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் 2 போட்டிகள் நடைபெற்றன. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதிக்கொள்ளும் போட்டி வான்கடே மைதானத்தில் நிகழ்ந்தது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை எடுத்தது. இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பில் 13வது ஓவருக்கு மேல் களமிறங்கிய ரிஷப் பண்ட் அடித்து விளாசினார். 27 பந்துகளில் 78 ரன்கள் அடித்து டெல்லி அணிக்கு பலம் சேர்த்தார்.
அதன் பின்னர் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 19.2 ஓவர்களின் முடிவில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றது. போட்டியின் முடிவில் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் யுவ்ராஜ் சிங், ‘டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஸ்கோர் செய்த ரிஷப் பண்ட்டுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. 21 வயதில் வெளிநாட்டு மைதானங்களில் சதம் அடிப்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. இப்படியான அபார திறமை படைத்த இவரை பிசிசிஐ கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டும். உலகக்கோப்பையில் இடம் பெறுவாரா இல்லையா என தெரியவில்லை. ஆனால் அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது’ என்று புகழ்ந்து தள்ளினார்.
மேலும், ஓய்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த யுவ்ராஜ் சிங், தான் இன்னும் அதைப்பற்றி ஒரு முடிவுக்கு வருவதில் குழப்பத்துடன் இருப்பதாகவும், இந்த கேள்வியை தனக்குள்ளே கேட்டுக்கொண்ட பிறகு இன்னும் சில காலம் விளையாடலாம் என்று முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தனது ஓய்வைப் பொருத்தவரை, யாரும் தன்னை வற்புறுத்துவதற்கு முன்னர் தானாகவே ஓய்வை அறிவித்து சென்றுவிடும் அளவுக்குத்தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 14 வயதில் இருந்து கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடத் தொடங்கிய தனக்கு, ஓய்வு பற்றிய குழப்பமான சூழல் உண்டானபோது, தான் சச்சினுடன் பேசியதாகவும் அப்போது அவர் கூறிய ஆலோசனைகள் தனக்கொரு தெளிவினைத் தந்ததாகவும், அது தனக்கு புத்துணர்ச்சியாகவும் தொடர்ந்து ஆடுவதற்கு உதவுவதாகவும் யுவ்ராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.
