'ட்ரம்ப்பின் அடுத்தடுத்த அதிரடிகளால்'... 'பாதிக்கப்பட்டுள்ள டாப் இந்திய ஐடி நிறுவனங்கள்!'... 'விவரங்கள் உள்ளே'...
முகப்பு > செய்திகள் > வணிகம்அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வெளிநாட்டினரை வேலையில் அமர்த்துவது குறித்த அறிவிப்புக்கு பின் இந்திய ஐடி நிறுவங்களின் பங்குகள் சரிந்துள்ளன.
அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே வேலை என அங்குள்ள ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் 2020 இறுதி வரை ஹெச்1பி விசா மற்றும் இதர விசாக்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படாது என முன்னதாக அறிவித்திருந்த ட்ரம்ப், நேற்று அதிரடி உத்தரவில் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். அந்த உத்தரவில் அமெரிக்காவின் அரசாங்க ஒப்பந்தங்களில் வேலையில் அமர்த்த அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் எனவும், இதில் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களை வேலையில் அமர்த்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அதிபர் ட்ரம்ப், அமெரிக்க அரசு ஒரேயொரு எளிமையான விதியின் கீழ் செயல்படுவதை உறுதி செய்யும் உத்தரவில் இன்று நான் கையெழுத்திடுகிறேன். இது அமெரிக்கர்களை பணியில் அமர்த்த வழிவகுக்கும்" எனக் கூறியுள்ளார். அதிபர் ட்ரம்பின் இந்த அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால், அங்குள்ள இந்திய நிறுவனங்கள், குறிப்பாக ஐடி நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தினை சந்தித்து வருகின்றன.
அமெரிக்க நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு, பிற நாட்டினருக்கு வழங்கப்படும் விசா தான் ஹெச்1பி விசா. இந்த ஹெச்1பி விசாவினால் இந்தியாவின் ஐடி துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், அரசு ஒப்பந்த பணிகளில் வெளிநாட்டினரை பணியமர்த்த தடை அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதுடன் ஹெச்1பி விசா தொடர்பாகவும் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்து வருகிறார்.
இதன்காரணமாக இந்திய ஐடி நிறுவனங்களின் பங்குகள் சரிவு அடைந்துள்ளன. அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு பின்பு, பிஎஸ்இ-யில் ஐடி துறை சார்ந்த டெக் மகேந்திரா 3.18% சரிவுடனும், இன்ஃபோசிஸ் நிறுவனம் 1.29% சரிவுடனும் காணப்படுகிறது. மேலும் டிசிஎஸ் பங்கு விலையானது 1.11% வீழ்ச்சியுடனும் காணப்படுகிறது. இதில் நிஃப்டி ஐடி இன்டெக்ஸ் 1.20% வீழ்ச்சி கண்டுள்ளது. பிஎஸ்இ ஐடி இன்டெக்ஸ் 165 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,967 ஆக உள்ளது.