100 வருஷத்துக்கு முன்னாடி மூழ்கிப்போன கப்பலில் இருக்கும் பொக்கிஷம்.. கப்பலை நெருங்கவிடாத கடல் மான்ஸ்டர்? கடைசியா உள்ள இருந்ததை கண்டுபிடிச்ச நபர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்முதலாம் உலகப்போரின்போது கடலில் மூழ்கிய கப்பலில் இருக்கும் பொக்கிஷத்தை 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்துள்ளார் ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவர்.

முதலாம் உலகப்போர்
அது 1918 ஆம் ஆண்டு. உலகப்போர் உக்கிரமடைந்திருந்த நேரம். பிரிட்டிஷ் சரக்கு கப்பல்களை ஜெர்மானிய கப்பற்படை குறிவைத்து தாக்கிக்கொண்டிருந்தன. அப்படியான சூழலில் இங்கிலாந்தின் கார்ன்வெல் கடலில் சென்றுகொண்டிருந்த SS Libourne என்னும் சரக்கு கப்பலை அழிக்க திட்டமிட்டது ஜெர்மானிய படை. நினைத்ததை போலவே, கப்பல் கடுமையான சேதங்களை அடைந்து கடலுக்குள் மூழ்கியது. அத்துடன் கப்பலில் இருந்த அனைத்து பொருட்களும் மூழ்கவே, அதனை மீட்க இங்கிலாந்து அரசு தீவிர முயற்சி எடுத்தும் பலன் கிடைக்கவில்லை. அதன்பின்னர் போரும் முடிவுக்கு வரவே, கப்பல் குறித்த செய்தியும் காலப்போக்கில் மறைந்துபோனது.
தேடல்
இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த டார்க்ஸ்டர் என்னும் ஆய்வு அமைப்பு 100 ஆண்டுகளுக்கு முன்பாக கடலில் மூழ்கிப்போன, கப்பலை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியது. பல்வேறுகட்ட ஆய்வுக்கு பிறகு கப்பலின் பாகங்கள் இருக்கும் இடத்தை இந்தக் குழு கண்டுபிடித்தது. இதனையடுத்து இந்த குழுவை சேர்ந்த டாம்னிக் ராபின்சன் என்னும் தொழில்முறை ஆழ்கடல் நீச்சல் வீரரை கப்பலை ஆராய கடலுக்குள் அனுப்பியது டார்க்ஸ்டர் குழு.
பொக்கிஷம்
இந்த கப்பலில் போர் வீரர்களுக்கு அளிக்க gherkins எனப்படும் வெள்ளரி பிஞ்சால் செய்யப்பட்ட ஊறுகாய் அதிக எண்ணிக்கையில் வைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் 10 ஆயிரம் பாட்டில்கள் பதப்படுத்தப்பட்ட மது பாட்டில்களும் கப்பலில் இருந்ததாக கூறுகிறது இங்கிலாந்து அரசு.
இந்நிலையில், கடலில் இறங்கிய ராபின்சன், சிதைந்த கப்பலின் பாகங்களுக்கு இடையே மது பாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில்,"உள்ளே ஏராளமான பாட்டில்கள் கப்பலின் சிதைந்த பாகங்களிலும், தரைப் பரப்பிலும் இன்னும் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றில் மேலே இருக்கும் தக்கை சேதமடைந்து கடல்நீர் உள்ளே போயிருக்கலாம்" என்றார். இருப்பினும் gherkins வைக்கப்பட்டிருந்த பாட்டில்கள் எவ்வளவு தேடியும் உள்ளே கிடைக்கவில்லை எனவும் ராபின்சன் கூறியுள்ளார்.
மான்ஸ்டர்
கடலின் அடிப்பாகத்தில் இருக்கும் கப்பலின் சிதைந்த பகுதிகளை நெருங்கவிடாமல் 3 அடி நீளமுள்ள ராட்சச ஆங்லர் மீன் இருந்ததாக கூறும், ராபின்சன்,"அது அந்த இடத்தை தனது பகுதியாக கருதுவது போலத் தோன்றியது. வழக்கமாக கடற்கரைகளில் காணப்படும் இந்த வகை மீன்கள் 7 அங்குலம் மட்டுமே இருக்கும். ஆனால் கப்பலில் இருந்த ஆங்லர் மீன் 3 அடி நீளமிருந்தது" என்றார்.
கடலுக்கடியில் இருக்கும் புராதன இடங்களை பாதுகாக்கும் வகையில் 2001 ஆம் ஆண்டு UNESCO அமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அதன்படி இந்த பாட்டில்களை வெளியே எடுக்க அனுமதியில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
100 ஆண்டுகளுக்கு முன்னர், கடலுக்குள் மூழ்கிய கப்பலில் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் இன்னும் அப்படியே இருப்பது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

மற்ற செய்திகள்
