லோன் அப்ளிகேஷன்கள் மூலம் வரும் ஆபத்து.. சென்னை காவல் ஆணையர் கொடுத்த முக்கிய அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆன்லைன் மூலமாக கடன் பெறும் அப்ளிகேஷன்களை பயன்படுத்தவேண்டாம் என சென்னை காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

எச்சரிக்கை
சமீப காலங்களில் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் அப்ளிகேஷன்கள் அதிகரித்துவிட்டன. குறைவான சிபில் ஸ்கோர் இருந்தாலே போதுமானது எனக்கூறி வலைவிரிக்கும் இந்த கும்பல் கொஞ்ச நாளிலேயே தங்களது வேலைகளை காட்டத்துவங்கிவிடுவர். வாங்கிய பணத்தை விட அதிகமான பணத்தை கட்டும்படி நச்சரிக்கும் இந்த கும்பல், ஒருகட்டத்தில் கடன் வாங்கியவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டவும் செய்வதாக காவல்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இதேபோல, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா பகுதிகளில் ஆன்லைன் லோன் அப்ளிகேஷன் மூலமாக மோசடியில் ஈடுபட்டு வந்த 4 பேர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் கடன் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் பணத்தை இவர்கள் சுருட்டியதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் இதுபற்றி பேசிய சென்னை காவல்துறை ஆணையர் ஷங்கர் ஜிவால்," லோன் அப்ளிகேஷன்கள் மூலமாக கடன் பெற்றவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிவந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
லோன் ஆப் வேண்டாம்
மேலும், இதுபற்றி பேசிய அவர் ஆன்லைன் லோன் பெறும் அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதுவரையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த தீபக்குமார் பாண்டே (26), ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்தர் தன்வர்(24) இவரது சகோதரி நிஷா(22), டெல்லியைச் சேர்ந்த பிரகாஷ் சர்மா (21) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து இந்த வேலைகளை செய்தது தெரிய வந்திருப்பதாகவும் ஷங்கர் ஜிவால் கூறினார்.
இந்த மோசடி வேலையில் 50 பேர்கொண்ட கும்பல் ஈடுபட்டிருப்பதாகவும் மீதியுள்ள நபர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இவர்களிடமிருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கி கணக்குகளை முடக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், மக்கள் இதுபோன்ற அப்ளிகேஷன்களை உபயோகிப்பதை தவிர்க்கும்படி வலியுறுத்தினார்.

மற்ற செய்திகள்
