'வெளிய வா, வெளிய வான்னு ஒருத்தன் கத்துனான்'... 'நான் உயிரை கையில புடிச்சிட்டு இருந்தேன்'... 'இன்ஸ்டா வீடியோவில்' எம்.பி சொன்ன பகீர் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கேபிடல் வளாகத்தில் வைத்து நிகழ்ந்த வன்முறை, ஒட்டுமொத்த உலகிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே, அந்த கலவரத்தின் போது தனக்கு நடந்த கசப்பான அனுபவம் ஒன்றை அழுகையுடன், அமெரிக்க ஜனநாயக கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் (Alexandria Ocasio-Cortez) என்பவர் வீடியோ ஒன்றில் விவரித்துள்ளார்.
'நான் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பினேன். நான் இதுகுறித்து பலரிடம் தெரிவிக்கவில்லை' என அலெக்ஸாண்ட்ரியா தெரிவித்தார். மேலும், தனது இன்ஸ்டா வீடியோவில் இது பற்றி பேசும் போது, 'என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாத அழுத்தத்தை நான் கேபிடல் கட்டிடத்தில் இருந்த போது அனுபவித்தேன். அங்கு நான் இருந்த போது, வெளியில் நடப்பதை பார்க்க முடியுமா என்று பார்க்க கதவு இடுக்கு வழியாக பார்த்தேன்.
ஒரு வெள்ளை மனிதன், கருப்பு நிற தொப்பி அணிந்திருந்தான். 'கதவைத் திற' என்று கத்தினான். நான் பயத்தில் உறைந்து விட்டேன். உயிர் போகும் பயத்தில் உறைந்திருந்த எனக்கு, அந்த சில நொடிகளில் மனதில் எழுந்த உணர்வுகளை நிச்சயம் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அந்த ஆணின் முகத்தில் இருந்த வெறுப்பும், 'வெளியே வா, வெளியே வா' என்ற கத்தலும் என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாத அழுத்தத்தை தந்தது.
எல்லோரும் இதனைக் கடக்க பழக வேண்டும் என ஆறுதல்படுத்த கூறுகிறார்கள். அப்படி எளிதில் கடந்து விட முடியாது. இந்த சம்பவத்தை கடந்து விடு என சொல்பவர்கள், பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிப்பவர்களிடம் நீங்கள் இதனைத் தொடர்ந்து செய்யுங்கள் என கூறுவது போல உள்ளது' என அலெக்ஸாண்ட்ரியா கடுமையாக சாடியுள்ளார். இந்த வீடியோ, தற்போது உலகளவில் கடும் அதிர்வலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.