'ஒமைக்ரானோட முடியல...' 'இன்னும் எக்கச்சக்கமா வைரஸ் வரப்போகுது...' - ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகளவில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் வெறும் முடிவல்ல என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் வைரசாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஒரு சில நாடுகளில் இதன் தாக்கம் குறைவாக இருந்தாலும் பெரும்பாலான நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிவேகமாக பரவிவருகிறது.
வேகமாக பரவுதல்:
ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் மைக்கேல் சேன் சி வாய் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், டெல்டா வைரஸை விட 70 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது என தெரிவிக்கின்றனர். தற்போது பரவி வரும் இந்த ஓமைக்ரான் வைரஸ் குறித்து மேலும் பல ஆய்வுகள் நடத்தவேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
உலக நாடுகளில் ஒமைக்ரான்:
அதுமட்டுமல்லாமல் இனி கரோனா இன்ஃப்ளுவன்சா வைரஸ் போல், மக்கள் வாழக்கற்றுக் கொள்ளும் வகையில் ஒரு நோய்க்கிருமியாகும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகளவில் ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 77 நாடுகளில் பரவி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல் தொற்று கண்டறியப்பட்ட மூன்று வாரங்களில் 77 நாடுகளுக்குப் பரவி இருப்பது அதன் பரவும் தீவிரத்தைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளுக்கும் பாதிப்பு:
குறிப்பாக அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வின்படி கடந்த 7 நாட்களில் அன்றாடம் 1,90,000 ஆயிரம் பேருக்கு தினமும் தொற்று உறுதியாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் மட்டுமே 4 மடங்கு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதியாகும் குழந்தைகளில் 5 வயதுக்கும் உட்பட்டோரில் பாதிக்கும் அதிகமானோர் என அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான்:
இந்தியாவை பொறுத்தவரை ஒமைக்ரான் வைரஸ் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இன்றுவரை ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகமாக உள்ளது. மேலும் மத்திய அரசு சார்பாக மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில், மத்தியக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒமைக்ரான் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், 'கொரோனா என்பது மனித குலம் எதிர்கொள்ளும் கடைசி தொற்று நோயாக இருக்காது. இது கடைசி பெருந்தொற்று அல்ல, இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும்' என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
