VIDEO: கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து எழுந்த ‘சுனாமி’.. 5 நாடுகளுக்கு எச்சரிக்கை.. பரபரக்க வைத்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் டோங்கா என்றால் குட்டித் தீவு அமைந்துள்ளது. இங்கு சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தீவில் எரிமலைகள் நிலப்பரப்பின் மீதும், கடலுக்கு அடியிலும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் டோங்கா பகுதியில் உள்ள கடலுக்கு அடியில் நேற்று எரிமலை வெடித்து சிதறியது. இதனால் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரையிலும் சாம்பல் மற்றும் புகை மண்டலம் பரவியது.
இதனை அடுத்து எரிமலை வெடித்த அதிர்வு காரணமாக கடல் அலைகள் கொந்தளிப்பு ஏற்பட்டு சுனாமி அலைகள் உருவானது. இதனால் கடல் அலைகள் சீற்றத்துடன் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் வேகமாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்த எரிமலை வெடித்து சிதறியதில் வெளியான கரும்புகை காரணமாக சில நிமிடங்கள் டோங்கா தீவு இரவு போல காட்சி அளித்தது. இந்த நிலையில் அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிலி, கனடா, அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Stay safe everyone 🇹🇴 pic.twitter.com/OhrrxJmXAW
— Dr Faka’iloatonga Taumoefolau (@sakakimoana) January 15, 2022
இந்த சூழலில் தீவில் நிலைமையை கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால் உதவ தயாராக இருப்பதாகவும் நியூசிலாந்து ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சுனாமியால் மக்களுக்கு காயம் ஏற்பட்டதா? அல்லது உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
