"பக்கத்திலேயே வெடிகுண்டு சத்தம்.. சாப்பாடு, தண்ணி கூட இல்ல.." கதறும் தமிழக மாணவி.. நெஞ்சை பிழியும் வீடியோ கால்
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக, உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் வேளையில், இன்னொரு பக்கம் ரஷ்யாவின் தாக்குதலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக ரஷ்யா கைவிட வேண்டுமென பல உலக நாடுகள், தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.
இந்த பயங்கர தாக்குதலின் காரணமாக, உக்ரைனில் வசிக்கும் மக்கள், கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பதுங்கு குழி
அதே போல, உக்ரைனில் பயிலும் இந்திய மாணவ மாணவிகள் மற்றும் பணிபுரியும் இந்தியர்களை உடனடியாக தாய்நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் பலரும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டே இருக்கின்றனர். அதே வேளையில், மேலும் சிலர், தங்கள் தங்கியிருக்கும் இடத்தில இருந்து, தப்பித்து வெளியே செல்ல வழி இல்லாமல், பதுங்குகுழி மற்றும் மெட்ரோ சுரங்கத்தில் உயிர் பயத்தில் ஒளிந்து கொண்டுள்ளனர்.
தமிழக மாணவி
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர், பெற்றோரிடம் வீடியோ காலில் பேசிய விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. கோவை தொண்டாமுத்தூர் பகுதியை அடுத்த குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஐஸ்வர்யா, உக்ரைன் நாட்டில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
வீடியோ கால்
அங்கு தற்போது போர் நடைபெற்று வருவதால், பதுங்கு குழி ஒன்றில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில், மாணவி ஐஸ்வர்யா பதுங்கியுள்ளார். அவருடன் இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் உள்ளனர். உக்ரைன் சூழல் குறித்து, தனது தந்தையிடம் பேசிய மாணவி ஐஸ்வர்யா, இந்திய தூதரகம் சார்பில், மேற்குப் பகுதியிலுள்ள மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர் என்றும், தெற்குப் பகுதியிலுள்ள மாணவ மாணவிகளை இன்னும் மீட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டு சத்தம்
அதே போல, அவர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த கடையின் மீது வெடிகுண்டு போடப்பட்டுள்ளது என்றும், போனில் அழைப்பதற்கு முன்பு கூட வெடிகுண்டு சத்தம் கேட்டது என்றும், மாணவி ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார். மேலும், பதுங்குகுழியில் கழிவறை வசதி கூட இல்லாமல், ஆண் பெண் என அனைவரும் ஒரே அறையில் தங்கி வரும் வேளையில், தண்ணீர் வசதி கூட இல்லை என்றும் ஐஸ்வர்யா பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
வீடியோ காலில் கண்ட மகளின் நிலையால் கடும் வேதனையில் இருக்கும் மாணவி ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள், எப்படியாவது தங்களின் மகளை மீட்டுத் தர வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.