'படிப்பு இங்கிலீஸ் லிட்ரேச்சர்'... 'எனக்கு இந்த ஸ்கில்ஸ் எல்லாம் இருக்கு'... 'வேலைக்கு விண்ணப்பித்த ஸ்டீவ் ஜாப்ஸ்'... நெட்டிசன்களை கவர்ந்த விண்ணப்பம்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகளவில் தொழில்நுட்ப சாதனங்களின் முன்னோடியாக இன்றளவும் இருப்பது ஆப்பிள். அந்த ஆப்பிள் நிறுவனத்திற்கு அடித்தளமிட்டவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ். தொழில்துறை, நிர்வாகம் எனச் சாதிக்கத் துடிக்கும் பலரும் தேடுவது ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றைத் தான்.
ஸ்டீவ் ஜாப்ஸின் அயராத உழைப்பு, கூர்மையான நிர்வாகத் திறன் ஆகியவற்றால் ஆப்பிள் நிறுவனத்தை உலகளவில் சக்திவாய்ந்த நிறுவனமாக மாற்றியதில் அவரின் பங்கு என்பது அளப்பரியது. இன்றளவும் ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் எந்த ஒரு தொழில்நுட்ப சாதனங்களிலும் ஸ்டீவ் ஜாப்ஸின் தாக்கம் நிச்சயம் இருக்கும்.
இந்த சூழ்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணமடைந்தார். இந்நிலையில் 1973ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் தனது கைப்பட எழுதி வேலைக்கு விண்ணப்பித்த விண்ணப்பம் ஒன்றும் ஏலத்திற்கு வந்துள்ளது. charterfields என்ற தளத்தில் இந்த ஏலம் நடைபெறுகிறது. 2018ம் ஆண்டு ஏற்கெனவே ஸ்டீவ் ஜாப்ஸின் விண்ணப்பம் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது அது ஒரு லட்சத்து 75ஆயிரம் டாலர் ஏலம் போனது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் அப்போது ஏலத்தில் எடுத்தார்.
அந்த விண்ணப்பத்தில் மேஜர் படிப்பாக இங்கிலீஸ் லிட்ரேச்சர் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்கில்ஸ் பகுதியில் கம்யூட்டர், கால்குலேட்டர் என்றும், தொழில்நுட்பம், டிசைன் பொறியியலில் சிறப்புத் தகுதி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த விண்ணப்பத்தில் எந்த வேலை, எந்த நிறுவனம் என்ற வேறு தகவல்கள் இடம்பெறவில்லை. ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் கம்யூட்டர் நிறுவனம் என்பதைக் குறிப்பதாகவே உள்ளது. இந்த ஏலம் பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது