இலங்கை அரசியலில் திருப்பம்.. ராணுவ ஜெட்டில் வெளிநாட்டுக்கு தப்பிய அதிபர் கோத்தபய.. பரபரப்பில் இலங்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ ஜெட்டில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கை, கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. இதனிடையே செலவுகளை கட்டுப்படுத்தவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.
ஆனாலும், சிக்கல் தீர்ந்தபாடில்லை. இதனையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இலங்கை முழுவதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு மக்கள் கையில் கேன்களுடன் வரிசையில் நின்று வருகின்றனர். இது போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.
முற்றுகை
இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு-வில் இருக்கும் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நேற்று முற்றுகையிட்டனர். மிகுந்த பாதுகாப்பு கொண்ட அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் உள்ளே இருக்கும் அறைகளை ஆக்கிரமித்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன
போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தனர். அந்த வகையில் இன்று தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்ய இருப்பதாக கோத்தபய அறிவித்திருந்தார்.
தப்பி ஓட்டம்
இந்நிலையில், அதிபர் தனது குடும்பத்தினருடன் ராணுவ ஜெட்டில் மாலத்தீவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டை விட்டு வெளியேற தனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கோத்தபய கோரிக்கை வைத்ததாகவும் அதன் பின்னரே விமானப்படையின் ஜெட் விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது மாலத்தீவில் உள்ள மாலே பகுதியில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அதிபர் என்பதால் தங்களால் தடுக்க முடியவில்லை எனவும் அதிபர், அவரின் மனைவி, இரண்டு பாதுகாவலர்கள் ஜெட்டில் தப்பித்ததாகவும் வெளியேறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாரப்பூர்வமாக பதவி விலகுவதாக அறிவித்திருந்த கோத்தபய வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றது இலங்கை அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | சொகுசு ஹோட்டலில் சூட் ரூம்.. கட்டணம் எதுவும் கிடையாது.. ஆனா இப்படி ஒரு கண்டிஷன் இருக்காம்..!