சொகுசு ஹோட்டலில் சூட் ரூம்.. கட்டணம் எதுவும் கிடையாது.. ஆனா இப்படி ஒரு கண்டிஷன் இருக்காம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயினை சேர்ந்த சொகுசு ஹோட்டல் ஒன்று புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சொகுசு அறையில் வாடிக்கையாளர்கள் இலவசமாக தங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு நடுவே குட்டி தீவில் சொகுசு ஹோட்டலில் தங்குவது பலருக்கும் கனவாக இருக்கக்கூடும். வேலைப்பளு, அலைச்சல்கள் என அனைத்தையும் துறந்து சுற்றுலா செல்ல யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? அதுவும் கட்டணம் எதுவும் இல்லாமல் சொகுசு ஹோட்டலில் தங்குவதற்கு இடமும் கிடைத்தால் எப்படி இருக்கும்? உண்மைதான். ஸ்பெயினை சேர்ந்த ஹோட்டல் ஒன்று இப்படியான அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
சொகுசு ஹோட்டல்
தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இருக்கிறது இபிஸா தீவு. சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக திகழும் இந்த தீவில் ஏராளமான சொகுசு விடுதிகள் அமைந்துள்ளன. சுற்றி கடல், நடுவில் குட்டி தீவு. கண்கவர் இடமான இந்த இபிஸாவுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்புகின்றனர். அப்படியானவர்களை ஆச்சர்யப்படுத்த நினைத்திருக்கிறது இங்குள்ள ஹோட்டல் ஒன்று.
இங்கு ஸிரோ சூட் ரூம் (Zero Suite) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு இரவு வாடிக்கையாளர்கள் இலவசமாக தங்கிக்கொள்ளலாம். அதற்கு கட்டணம் ஏதும் கிடையாது என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
கண்டிஷன்
இந்த சூட் ரூமில் தங்குபவர்களுக்கு ஒரே கண்டிஷன் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கண்ணாடியால் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது உள்ளே இருப்பது அப்படியே வெளியே தெரியும் படி இந்த அறை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறையில் இருக்கும் கழிவறை மட்டும் வழக்கம்போல மறைவான சுவரால் தடுக்கப்பட்டிருக்கிறது.
கலை நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மற்றும் கலைஞர்களை ஈர்க்கும் விதமாக இந்த அறையை வடிவமைத்ததாக கூறியுள்ளது இந்த ஹோட்டல் நிர்வாகம். இந்த தகவல் வெளிவந்த உடனேயே பலரும் இந்த அறைக்கு செல்ல போட்டிபோட்டு வருகின்றனராம். குறிப்பாக சமூக வலைதள பிரபலங்களிடையே இந்த அறை மிகவும் பிரபலமாகியுள்ளது.