"நிலைமை கைமீறி போய்டுச்சு".. இலங்கை அதிபர் மாளிகையை வசப்படுத்திய பொது மக்கள்.. அமெரிக்கா வெளியிட்ட புதிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்கடும் பொருளாதார நெருக்கடியால் தவித்துவந்த இலங்கை மக்கள், அந்நாட்டு அதிபரின் மாளிகைக்குள் நுழைந்திருக்கிறார்கள். இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கை, கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. இதனிடையே செலவுகளை கட்டுப்படுத்தவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.
ஆனாலும், சிக்கல் தீர்ந்தபாடில்லை. இதனையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இலங்கை முழுவதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு மக்கள் கையில் கேன்களுடன் வரிசையில் நின்று வருகின்றனர். இது போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.
முற்றுகை
இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு-வில் இருக்கும் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நேற்று முற்றுகையிட்டனர். மிகுந்த பாதுகாப்பு கொண்ட அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் உள்ளே இருக்கும் அறைகளை ஆக்கிரமித்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அமெரிக்கா
அசாதாரண சூழ்நிலை காரணமாக அதிபரும் பிரதமரும் பதவி விலகியதை அடுத்து, அமெரிக்கா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை மக்களின் அதிருப்தியை தணிக்க புதிதாக அமையும் அரசு கவனம் செலுத்த வேண்டும். மேலும் இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். நீண்ட காலத்திற்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை இலங்கை எட்டுவதற்கான முயற்சிகளை வேகமாக செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.