ரோடு இல்ல... கார் இல்ல... ஆனா... உலகத்தின் ஹைடெக் சிட்டி 'இது' தான்!.. 'இப்படி ஒரு நகரமா?.. என்னங்க சொல்றீங்க'?.. வாயடைத்துப் போன உலக நாடுகள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்சாலைகள் இல்லாத, கார்கள் இல்லாத, துளியும் மாசு இல்லாத ஒரு நகரத்தை சவுதி அரேபிய அரசு உருவாக்க இருக்கிறது.
சுற்றுசூழல் மாசுபாடுகளால் நிகழும் காலநிலை மாற்றங்கள்தான் நடப்பு உலகின் மிகப்பெரும் கவலை.
இதனைத் தடுக்க உலக நாடுகள் ஒரே குரலில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு விதமான மாசுக்களை தடுக்க அரசாங்கங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதற்கேற்றவாறு தொழில்நுட்பங்களும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுசூழலை காக்க சமீபத்தில் இங்கிலாந்து அரசு 2030-க்குப் பிறகு டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் பிரிட்டனில் விற்பனை செய்யப்படாது என்று அதிரடியாக அறிவித்தது.
இப்போது இதேபோல் ஒரு அறிவிப்பை, சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தனது 'கனவு திட்டம்' என்று அறிவித்துள்ளார்.
'Neom' என்ற பெயரிலான அந்தத் திட்டம், 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கிறது. சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் 10,000 சதுர மைல் பரப்பில் ஒரு முதலீட்டு மையம் உருவாக்கப்பட இருக்கிறது. முற்றிலும் பின் சல்மான் சிந்தனையில் தோன்றிய இந்தத் திட்டத்தில் ஒரு கனவு நகரம் வடிவமைக்கப்பட உள்ளது.
170 கிலோமீட்டர் நீளமுள்ள (106 மைல்) இந்த வளர்ச்சி திட்டம் 'தி லைன்' என்று அழைக்கப்படும். இந்தத் திட்டத்தில் சாலை இல்லாமல், கார் இல்லாமல், ஒரு துளி மாசு கூட உற்பத்தி ஆகாத நகரமாக அதை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் இந்த நகரத்தில் 10 லட்சம் மக்கள் வசிக்கும் அளவு குடியிருப்புகள், 3 லட்சத்து 80 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிகழ்ச்சியில் நேற்று பேசிய சவுதி இளவரசர் பின் சல்மான், "இந்த நகரத்தின் உள்கட்டமைப்புக்கு மட்டும் 100 பில்லியன் டாலர் முதல் 200 பில்லியன் டாலர் வரை செலவாகும். இந்த நகரத்தில் எந்தப் பயணமும் 20 நிமிடங்களுக்கு மேல் இருக்காது.
மனித குலத்தில் இது ஒரு புரட்சி திட்டமாக இருக்கும். வளர்ச்சிக்காக இயற்கையை தியாகம் செய்வதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. இந்த நகரம் பூஜ்ஜிய உமிழ்வுகள் கொண்ட 'மனிதகுலத்திற்கான புரட்சி' இருக்கும்" என்று பேசியுள்ளார்.