'மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி'... 'அடுத்தடுத்த அதிரடிகளால்'... 'ஆச்சரியம் கொடுக்கும் நாடு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி அந்நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை முதல்முதலாக நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம் என கடந்த மாதம் உலக நாடுகளுக்கு ரஷ்யா அறிவித்தது. இதையடுத்து காமாலியா தொற்றுநோய் தடுப்பு ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து, ரஷ்யா தயாரித்துள்ள அந்த தடுப்பூசிக்கு 'ஸ்புட்னிக்-வி' எனப் பெயரிடப்பட்டது. ஆனால் இந்த தடுப்பூசி அவசர கதியில் தயாரிக்கப்பட்டுள்ளது, முறையான பரிசோதனைகளை முடிக்கவில்லை, அதனால் இந்த தடுப்பூசியை ஏற்றுகொள்ள முடியாது என உலக நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
இதையடுத்து ஸ்புட்னிக்-வி மருந்தின் மீதான நம்பகத்தன்மையை உலகிற்கு உணர்த்தும் வகையில், தன்னுடைய மகளுக்கே இந்த மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அதிரடியாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். அத்துடன் நாங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அனைத்து கட்ட பரிசோதனைகளையும் வெற்றிகரமாக கடந்துவிட்டதன்மூலம், இதுதொடர்பான உலக நாடுகளின் கேள்விகளுக்கு விடையளித்துவிட்டோம் என ரஷ்யா சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதற்கிடையே கடந்த வாரம் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி சிறந்த பாதுகாப்பு அளிப்பதாக பிரபல மருத்துவ இதழான லான்செட் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தடுப்பூசிக்கு சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்தில் ஸ்புட்னிக்-வி நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இன்று முதல் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.