5 மாதங்களுக்கு பிறகு தொடங்கிய வெளியூர்களுக்கான பொதுப் போக்குவரத்து!.. 'இதெல்லாம்' கட்டாயம் கடைபிடிக்கணும்!.. ரயில், பேருந்து சேவைகளில் அதிரடி மாற்றங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஐந்து மாதங்களுக்கு பிறகு, தமிழகம் முழுவதும் வெளி மாவட்டங்களுக்கான பேருந்து, சிறப்பு ரயில், சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால், பேருந்துகள் இயக்கம் ரத்து செய்யப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையிலான அரசு மற்றும் தனியார் பேருந்துகளையும் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி இன்று அதிகாலை முதல் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
முன்னதாக பயணத்திற்கு முன்பும் பின்பும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு, கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களை பேருந்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.
அதேபோல பணியின்போது ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 5 மாதங்களாக ஓட்டுநர்கள் இரவில் ஓய்வில் இருந்ததால், இரவு நேரத்தில் பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஓட்டுநர்கள் தூங்காமல் இருக்க, நடத்துனர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலைகளில் தடுப்புகளும் அதிகமாக வைக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டும் பேருந்தை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையிலிருந்து மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, தூத்துக்குடி, மேட்டுப்பாளையம், கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை ஆகிய இடங்களுக்கு செல்லும் 13 சிறப்பு ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட்டுகளுடன் வரும் பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ரயில் நிலையத்தில் உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்காக, பயணிகள் குறைந்தது 90 நிமிடங்களுக்கு முன்பே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நோய் அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், ரயிலுக்குள் போர்வைகள் மற்றும் திரைச்சீலைகள் வழங்கப்படக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே செப்டம்பர் 12 முதல் தமிழகத்திற்கு மேலும் ஆறு சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க உள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதில், சென்னை - டெல்லி மற்றும் டெல்லி- சென்னை இடையே தினசரி ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து பீகார் மாநிலம் சாப்ரா இடையே வாரத்தில் இரு நாளும், திருச்சி - ஹவுரா இடையே வாரத்திற்கு இரண்டு நாட்களும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களின் முன்பதிவு வருகிற 10ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
அதேபோல, ஐந்து மாதங்களுக்கு பிறகு சென்னை மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கியுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் சேவை நேரங்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், வழித்தடங்களில் ரயில் நிற்கும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சாலை வரி தள்ளுபடி, 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, செப்டம்பர் 30 வரை பேருந்துகளை இயக்க போவதில்லை என்று அச்சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மற்ற செய்திகள்
