'தங்கப் பதக்கம் பறிப்பு...' 'நான் ஊக்கமருந்து எடுக்கவில்லை...' 4 ஆண்டுகள் விளையாட தடை விதித்து அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனையாகிய கோமதி மாரிமுத்து ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் போது ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், தங்கப் பதக்கத்தையும் பறித்து, மேலும் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் முடிகண்டம் பகுதியைச் சேர்த்தவர் கோமதி மாரிமுத்து. வேகமாக ஓடும் திறன் பெற்ற கோமதி மாரிமுத்து, இளங்கலை வணிகவியல் பட்டதாரி பட்டம் பெற்று பெங்களூருவில் வருமான வரித்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 7 இடத்தையும், 2015 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 4 ஆவது இடத்தையும் கைப்பற்றினார். மேலும் கடந்த ஆண்டு (2019) தோஹாவில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்நிலையில் ஆசிய போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றசாட்டு எழுப்பப்பட்ட நிலையில் அவரை சோதனைக்கு உட்படுத்தியது. மேலும் முதற்கட்ட சோதனையில் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டுள்ளார் என்று உறுதியான நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் போட்டிகளில் பங்கேற்க அவருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போதைய இரண்டாம் கட்ட சோதனையிலும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கோமதி மாரிமுத்து 4 ஆண்டுகளுக்கு போட்டியில் பங்கேற்க அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது.
இதனை தொடர்ந்து, கோமதி மாரிமுத்து தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், தான் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தான் சாப்பிட்ட அசைவ உணவில் அந்த பொருள் இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
