‘சர்ச்சைக்குரிய கருத்து’... ‘பதிவிட்ட அதிபருக்கு’... ‘அதிர்ச்சியளித்த ட்விட்டர்’!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Aug 27, 2019 02:03 PM
காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்விக்கு ட்விட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவைப் பெற முயன்ற பாகிஸ்தானின் திட்டம் தோல்வியைத் தழுவியது.
தற்போது காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் சூழலில், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக அங்கு போராட்டம் நடைபெறுவதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த பதிவு அவதூறு பரப்பும் விதமாக அமைந்துள்ளதாகக் கூறிய ட்விட்டர் நிறுவனம், ஆரிஃப் அல்விக்கு நோட்டீஸ் அனுப்பியது. ட்விட்டர் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்நாட்டின் மனித உரிமைகள் அமைச்சர் சிரீன் மஸாரி, இது தவறான எடுத்துக்காட்டு என விமர்சித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் முராத் சயீத், வெளியிட்ட ட்விட் பதிவு இந்திய சட்டங்களை மீறும் வகையில் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அண்மையில் ஜம்மு காஷ்மீர் குறித்து சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்தாக பாகிஸ்தானை சேர்ந்த பலரின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
