'கர்ப்பமான 7000 பள்ளி மாணவிகள்'... 'நிலைகுலைந்து போன ஆப்பிரிக்க நாடு'... 'மாணவிகளுக்கு என்ன நடந்தது'?... அதிரவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்'கர்ப்பமான 7000 பள்ளி மாணவிகள்' இதைப் பார்க்கும் போது பலருக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் அங்குச் சர்வசாதாரணமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பது தான் அதிர்ச்சியின் உச்சம்.

கொரோனா பாதிப்பு உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ள நிலையில், அது ஆப்பிரிக்க நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் கொரோனா பரவல் காரணமாக அங்குக் கடந்த 5 மாதங்களாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அங்கு 7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கொடுமையின் உச்சம் என்னவென்றால் கர்ப்பமான பல மாணவிகள் வயது 10ல் இருந்து 14 வயதுக்குள் இருப்பவர்கள். இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா உக்கிரமாகப் பரவ ஆரம்பித்த நேரத்திலிருந்து அங்குள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டது. இதன்பின்னரே மாணவிகள், சிறுமிகள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளது.பலோம்பே நகரில் மட்டும் இந்த காலகட்டத்தில் 1000 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர். கல்வி தொடர்பான சிவில் சொசைட்டி கூட்டணியின் இயக்குநர் பெனடிக்டோ கோண்டோவ் கூறுகையில், ''குழந்தைகள் அதிலும் குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் சுரண்டல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா நேரத்தில் இளம் சிறுமிகளின் வாழ்க்கை பாழாவது அதிர்ச்சி அளிக்கிறது'' என வேதனை தெரிவித்துள்ளார்.
கென்யாவிலும் ஜூலை தொடக்கத்தில், கொரோனா ஊரடங்கின் போது சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இதில் 150,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட கடந்த 3 மாதங்களில் 152,000 கென்ய சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது இது மாத சராசரியில் 40 சதவீதம் அதிகம் ஆகும். சிறுமிகள் கர்ப்பமடையும் விகிதத்தில் கென்யா தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு 1000 சிறுமிகளில் 82 பேர் கர்ப்பம் தரிக்கிறார்கள்.
இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கும். தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் முன்னேறிக் கொண்டு செல்வதாகப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், எதுவும் அறியாத பள்ளிக்குச் செல்லும் வயதில் உள்ள சிறுமிகள் இதுபோன்ற பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவது வேதனையின் உச்சம். வல்லரசு நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் நிச்சயம் இந்த பிரச்சனை குறித்துப் பேச வேண்டும்.
பள்ளி செல்லும் சிறுமிகளுக்கே இந்த நிலை என்றால், பள்ளிக்கூடத்திற்குக் கூட செல்லமுடியாமல் இருக்கும் பல சிறுமிகள் என்ன கொடுமைகளை எல்லாம் அனுபவிப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. மனித சமுதாயம் வளர்த்து விட்டதாக நாம் கூறிக் கொண்டாலும் இதுபோன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது, ''உலகின் மிக ஆபத்தான மிருகம் மனிதன் தான்'' என்ற கூற்று நினைவிற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

மற்ற செய்திகள்
