"3 வருஷமா தேடுறோம்.. கிடைக்கல"..அமெரிக்காவில் மர்மமான முறையில் காணாமல்போன இந்திய பெண்.. பொதுமக்கள் கிட்ட உதவி கேட்கும் காவல்துறை..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் மர்மமான முறையில் காணாமல்போன இளம்பெண்ணை காவல்துறையினர் கடந்த 3 வருடங்களாக தேடி வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் உதவுமாறு காவல்துறை அறிவித்திருக்கிறது.
இந்தியாவில் இருந்து பல கனவுகளோடு அமெரிக்க செல்லும் எல்லோரையும்போல தான் மாயூஷி பகத்தும் சென்றிருக்கிறார். குஜராத்தில் உள்ள வதோதரா இன்ஸ்டிட்யூட்டில் படித்த மாயூஷி, அதன் பின்னர் அமெரிக்கா சென்று மேற்படிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறார். அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு F1 மாணவர் விசாவில் அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கே அவர் நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அதன்பிறகு, அதிலிருந்து விலகி நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (NYIT) யில் இணைந்திருக்கிறார்.
காணவில்லை
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஜெர்சி நகரத்தில் வசித்துவந்த இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி தனது அப்பார்ட்மென்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார். அதுதான் அவரை கடைசியாக பார்த்தது என்கிறார்கள் அவரது நண்பர்கள். அன்று அவர் வண்ணமயமான பஜாமா பேண்ட்டும், கருப்பு நிற டி-ஷர்ட்டும் அணிந்திருந்ததாக சொல்கிறார்கள் அவரது நண்பர்கள்.
வெகுநேரமாகியும் மாயூஷி வீடு திரும்பாததால் கவலையடைந்த அவரது நண்பர்கள் தேட துவங்கியுள்ளனர். மாயூஷியின் தந்தை தனது மகளுக்கு மே 1 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அப்போது தான் நலமாக இருப்பதாகவும் ஆனால், 3 ஆம் தேதி வரை தன்னால் வீடு திரும்ப முடியாது எனவும் மாயூஷி தெரிவித்திருக்கிறார்.
புகார்
இதனைத்தொடர்ந்து மேலும், அச்சமடைந்த அவரது பெற்றோர் 1 ஆம் தேதியே காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருக்கின்றனர். ஆனால், போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து, அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI, தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. இந்நிலையில், காணாமல்போனவர்கள் மற்றும் தேடப்படுவோரின் பட்டியலில் மாயூஷியின் பெயரையும் இணைத்துள்ளது FBI.
மேலும், பொதுமக்கள் யாருக்கேனும் மாயூஷி குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திலோ அல்லது இந்திய தூதரக மற்றும் துணைத் தூதரகத்திலோ தகவல் அளிக்கும்படி FBI வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்காவில் மர்மமான முறையில் காணாமல்போன, இந்திய மாணவியை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் FBI உதவி கேட்டிருப்பது அங்குள்ள இந்தியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.