11 வருஷமா கஷ்டப்பட்டு தனியாளா உருவாக்கிய கார்.. "யாருமே உதவி பண்ணலன்னு ஃபீல் பண்ணப்போ".. ஆனந்த் மஹிந்திரா கொடுத்த செம ஆஃபர்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.
அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.
மேலும், அவர்களின் திறன் வெளியே தெரிந்து, அதற்கான அங்கீகாரம் கிடைக்கவும் வழி செய்யும். அந்த வகையில், தற்போது ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியை அடுத்த சனத் நகர் என்னும் இடத்தைச் சேர்ந்தவர் பிலால் அகமது. கணித ஆசிரியரான இவர், ஆட்டோமொபைல் பிரிவில் அதிக ஆர்வம் இருந்ததன் காரணமாக, சொந்தமாக கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் மாருதி கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
சுமார் 11 ஆண்டுகளாக, சூரிய சக்தி மூலம் இயங்க வைக்கும் கார் ஒன்றை உருவாக்க, ஆராய்ச்சி மற்றும் முயற்சிகளை தனியாளாக மேற்கொண்டு, கடைசியில் அதில் வெற்றியும் கண்டார் பிலால் அகமது. சோலார் காருடன் பிலால் நிற்கும் புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது. தனக்கு தேவையான நிதி ஆதரவு கிடைத்திருந்தால், காஷ்மீரின் எலான் மஸ்க்காக கூட மாறி இருப்பேன் என்றும் பிலால் குறிப்ப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தான், பிலால் அகமது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, "பிலாலின் ஆர்வம் பாராட்டுக்குரியது. இந்த முன்மாதிரியை தனியாளாக உருவாக்கியதை நான் பாராட்டுகிறேன். மேலும், இந்த வடிவமைப்பு, தெளிவான ஒரு உற்பத்திக்கு ஏற்ற பதிப்பாக உருவாக வேண்டும். ஒருவேளை, மஹிந்திரா ரிசர்ச் வேலியில் உள்ள எங்கள் குழு அதனை மேலும் மேம்படுத்த அவருடன் இணைந்து பணியாற்றலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என பிலால் அகமது குறிப்பிட்டிருந்த நிலையில், ஆனந்த் மஹிந்திரா இணைந்து பணியாற்றலாம் என குறிப்பிட்டுள்ள தகவல், பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.