"எங்க கரப்பான் பூச்சியும் நிலாவுல இருந்து கொண்டுவந்த மண்ணும் எங்களுக்கு வேணும்".. ஏல நிறுவனத்துக்கு நோட்டிஸ் விட்ட நாசா.. என்ன நடந்துச்சு?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த ஏல நிறுவனம் ஒன்று நிலவு மண் மற்றும் கரப்பான் பூச்சிகளை ஏலம் விடுவதை எதிர்த்து நாசா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நிலவுப் பயணம்
மனிதகுல வரலாற்றில் மிகமுக்கிய சாதனைகளில் ஒன்றாக கருதப்படுவது அமெரிக்காவின் நிலவுப் பயணம். இதன் மூலம் முதன்முறையாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது அமெரிக்கா. அப்பல்லோ 11 என்று அழைக்கப்படும் இந்த கனவுத் திட்டத்தினை 1969 ஆம் ஆண்டு அமெரிக்கா நிகழ்த்தியது. இந்த திட்டத்தின் போது, நிலவில் இருந்து மண் துகள்கள் சேகரிக்கப்பட்டு பூமிக்கு கொண்டுவரப்பட்டன. அதன்பின்னர் அந்த மண் துகள்களில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆராய்ச்சி
அந்த வகையில் பூமியில் உள்ள உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்ணுயிர்கள் ஏதேனும் நிலவில் இருக்கும் பாறைகளில் காணப்படுகிறதா? என்ற ஆய்வில் ஈடுபட்டு வந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்காக 3 கரப்பான் பூச்சிகளை பயன்படுத்தி வந்தனர். முக்கியமாக, மினசோட்டா பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் வல்லுனர் மரியன் புரூக்ஸ் என்பவரால் நிலவின் தூசி ஊட்டப்பட்ட கரப்பான் பூச்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,"நிலவின் பாறைகளில் நச்சுத்தன்மை இல்லை. அந்த தூசுக்களை உண்ட கரப்பான் பூச்சிகளுக்கு எவ்வித குறைபாடும் தோன்றவில்லை" என குறிப்பிடப்பட்டிருந்தது.
விற்பனை
ஆனால், சோதனை முடிந்த பிறகும், நிலவின் தூசி மற்றும் கரப்பான் பூச்சிகள் நாசாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. இந்த துகள்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் ப்ரூக்ஸ்-ன் வீட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு இவற்றை ப்ரூக்ஸ்-ன் மகள் ஒருவருக்கு விற்பனை செய்திருக்கிறார். இப்படி கை மாறிய நிலவின் துகள்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் இப்போது அமெரிக்காவை சேர்ந்த ஏல நிறுவனத்திடம் இருக்கின்றன.
அந்நிறுவனம் இதனை ஏலம் விடுவதாக அறிவித்ததால், நாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "நிலவில் இருந்து சேகரிக்கப்பட்ட மற்றும் ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமானவை. ஆகவே அவற்றை ஏலத்தில் விடுவது சட்டத்திற்கு புறம்பானது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்ட ரீதியாக இந்த சிக்கலை தீர்க்க இருப்பதாக அந்த ஏல நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மற்ற செய்திகள்
