அது என்ன வைரம் மாதிரி ஜொலிக்குது?...செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பொருள்.. வைரலாகும் புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்செவ்வாய் கிரகத்தில் பளபளப்பான பொருள் ஒன்று இருப்பதை பெர்சவரென்ஸ் ரோவர் படம் பிடித்திருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா…. பிசிசிஐ வெளியிட்ட புதிய அணியில் இடம்பெற்ற வீரர்கள்
விண்வெளி ஆராய்ச்சி மனித குலத்தின் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பூமியை தவிர்த்து வேறு கிரகங்களில் மனிதர்கள் இருக்கிறார்களா? அல்லது இருந்தார்களா? என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்கும் நோக்கில் பல்வேறு ஆய்வு நடவடிக்கைளை எடுத்துவருகின்றன உலக நாடுகள். அந்த வகையில் செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா அனுப்பியது தான் இந்த பெர்சவரென்ஸ் ரோவர்.
கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது பெர்சவரென்ஸ் ரோவர். இதனுடன் இன்ஜெனியுட்டி என்னும் ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு, புவியியல் ஆகியவை குறித்து இந்த ரோவர் ஆராய்ச்சி செய்து வருகிறது. அவற்றின் புகைப்படங்கள் நாசாவால் பெறப்பட்டு உடனுக்குடன் சமூக வலை தளங்களில் பகிரப்படுகின்றன. அந்த வகையில் தற்போது செவ்வாய் கிரகத்தில் பாறை ஒன்றில் பளபளப்பான பொருள் ஒன்று இருப்பதை ரோவர் கண்டுபிடித்துள்ளது. இது உலகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன பொருள் அது?
செவ்வாய் கிரகத்தில் பளபளக்கும் பொருள் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவிய நிலையில், அது என்ன என்பது குறித்து ரோவர் குழு விளக்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கியபோது வெளிப்பட்ட தெர்மல் பிளாங்கெட் தான் அது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும், ராக்கெட் தரையிறங்கிய இடம், இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருப்பதாகவும், ஒருவேளை செவ்வாய் கிரகத்தின் பலமான காற்றால் இந்த பொருள் இங்கே வந்திருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர் நாசா ஆராய்ச்சியாளர்கள்.
இதுகுறித்து ரோவர் குழு வெளியிட்டுள்ள பதிவில்,"எங்களது குழுவினர் எதிர்பாராத ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இது வெப்பப் போர்வையின் ஒரு பகுதி. ராக்கெட் தரையிறங்கும் போது இது வெளிப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பழங்கால நுண்ணுயிர் வாழ்வதற்கான ஆதாரங்களைக் கண்டறியும் நம்பிக்கையில், ரோவர் தற்போது கிரகத்தின் ஜெஸெரோ பள்ளத்தின் உள்ளே ஒரு பண்டைய நதி டெல்டா பகுதியை ஆய்வு செய்து வருகிறது.