ஆத்தாடி எம்மாம்பெருசு.. வலையில் சிக்கிய 100 வயதான ராட்சத லாப்ஸ்டர்..வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த மீனவர் ஒருவர் வீசிய வலையில் பிரம்மாண்ட லாப்ஸ்டர் சிக்கியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடல் உணவுகளில் பெரும்பாலானோரின் விருப்ப டிஷ்-ஆக இருப்பது லாப்ஸ்டர். கடலின் தரைப் பகுதியில் வசிக்கும் இந்த வகை உயிரினங்கள், நண்டுகளை போலவே, கால்களை கொண்டுள்ளன. உலகம் முழுவதும் கடல் உணவுகளின் வரிசையில் இந்த லாப்ஸ்டர்களுக்கு என பிரத்யேக இடம் இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஜேக்கப் நோல்ஸ் என்னும் மீனவர் ராட்சச லாப்ஸ்டர் ஒன்றை பிடித்துள்ளார்.
ராட்சச லாப்ஸ்டர்
ஜேக்கப் நோல்ஸ்-ன் குடும்பம் பாரம்பரிய மீன்பிடி குடும்பமாகும். நான்காம் தலைமுறை மீனவரான ஜேக்கப் இதுவரை கடலில் இவ்வளவு பெரிய லாப்ஸ்டரை தான் கண்டதில்லை எனக் கூறுகிறார். தான் பிடித்த லாப்ஸ்டரை கையில் ஏந்தியபடி ஜேக்கப் பேசும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஜேக்கப்,"இதன் சிறிய நகங்களின் உதவியால் நான் இதைப் பிடிக்க முடிந்தது. பொதுவாக லாப்ஸ்டர்களுக்கு நகங்கள் விழுந்த பின்னர் அவை மீண்டும் முளைக்கும். நான் பிடித்திலேயே இதுதான் மிகப்பெரிய லாப்ஸ்டர்" என்றார்.
100 வயது
மேலும், இந்த லாப்ஸ்டர் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வயதுகொண்டதாக இருக்கலாம் எனக் கூறிய ஜேக்கப்," எனது அப்பாவோ, தாத்தாவோ அல்லது கொள்ளுத் தாத்தாவோ இதே லாப்ஸ்டரை பிடித்து மீண்டும் கடலில் விட்டிருக்கக்கூடும்" என்றார். மேலும் நல்ல ஆரோக்கியத்துடனேயே அது இருப்பதாகவும் ஜேக்கப் குறிப்பிட்டார்.
அதன்பிறகு, லாப்ஸ்டரின் நகங்களில் உணவு துணுக்குகளை வைத்து, அதனை மீண்டும் தண்ணீரிலேயே விடுகிறார் ஜேக்கப். பொதுவாக அளவில் மிகப்பெரிய லாப்ஸ்டர்கள் அவற்றின் இனப்பெருக்கத்திற்கு ஆதாரமாக திகழ்வதால் ஜேக்கப் அதனை மீண்டும் தண்ணீரில் விடுவதாக வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மிகப்பெரிய லாப்ஸ்டரை பிடித்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.