குட் நியூஸ்...! 'கொரோனா தடுப்பூசியிலே அது தான் இப்போ லீடிங்...' - இது முக்கியமா அவங்களோட உடம்புல தான் நல்ல பலன் தருது...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் பல நாடுகளும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமாக செயல்படுகின்றன. இதில், அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தடுப்பூசியின் சிறப்பம்சம் என்னவென்றால், வயதான கொரோனா நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த மருந்தினால் பக்கவிளைவுகள் இல்லை என்பது கூடுதல் சிறப்பு ஆகும். கொரோனாவால் வயது முதிர்ந்தவர்கள் இளவயதினரை விட அதிக ஆபத்தில் இருப்பதால் மாடர்னா தடுப்பூசி அதிக கவனத்தை ஈர்க்கிறது.
இந்த நிலையில், தற்போதைய காலக்கட்டத்தில் தனது தடுப்பூசிக்காக காப்புரிமை செயல்படுத்தப்படாது என்று மாடர்னா நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழியும் வரை, தனது தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது வழக்கு எதுவும் தொடுக்கப்போவதில்லை எனவும் மாடர்னா தெரிவித்துள்ளன.
மாடர்னாவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்ற நிறுவனங்களும் தடுப்பூசி உருவாக்க வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாடர்னாவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி தேவைப்படும் காலகட்டத்தில், காப்புரிமை விவகாரங்களால் தடுப்பூசியின் எண்ணிக்கை குறைந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, முடிந்த அளவுக்கு எல்லா மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்காக காப்புரிமை தொடர்பாக வழக்கு தொடுக்க தயாராக இல்லை என்று மாடர்னா தெரிவித்துள்ளது.
உலகளவில் தற்போது 11 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் இருக்கின்றன. அதில் மாடர்னா தடுப்பூசி முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.