பெரும் பரபரப்பு! ஹைஜாக் ஆன கப்பலில் இந்தியர்கள்!! இந்திய அரசு வைத்த கோரிக்கை!!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த ஜனவரி 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.57 மணிக்கு ஏமனின் அல் குதைபா ஆளுமைக்குட்பட்ட பகுதியில் சென்றுகொண்டிருந்த போது ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சொந்தமான RWABEE எனும் சரக்குக்கப்பலை ஹவுதி தீவிரவாதிகள் கடத்திவிட்டதாக ஏமன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தக் கப்பலில் 7 இந்தியர்கள் உள்பட 11 மாலுமிகளையும் பிணைக்கைதிகளாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏமன் உள்நாட்டுப்போர்
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் ஓர் அங்கமாகும். உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
கப்பலில் சிக்கிய இந்தியர்கள்
இந்நிலையில் ஜனவரி 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சோகோட்ரா தீவில் சவூதி அரேபியா அமைத்திருந்த தற்காலிக மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உபகரணங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், அடுப்புகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகிய பொருட்களுடன் சவூதியின் ஜஸான் துறை முகத்திற்கு சென்றுகொண்டிருந்த வேளையில் கப்பலை களவாடியிருக்கிறது ஹவுதி தீவிரவாத அமைப்பு.
அதுமட்டுமல்லாமல் இந்தக் கப்பலில் 7 இந்தியர்கள் உள்பட 11 மாலுமிகளையும் பிணைக்கைதிகளாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் இந்த ஹவுதி தீவிரவாதிகள்?
பழங்கால ஏமனின் வட பகுதியில் ஆட்சியில் இருந்த ஷியா பிரிவைச் சேர்ந்த ஸெய்தி இனக்குழுவின் பாதுகாப்புப் படையாக முதலில் அறியப்பட்ட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி உடனான எல்லை பிரச்னையின்போது உலகளவில் கவனம் பெற்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு உதவி செய்வதாக சவூதி, அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மீட்பு நடவடிக்கைகள்
கடத்தப்பட்ட கப்பலையும், அதில் இருந்த மாலுமிகளையும் மீட்கும் பணியில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 7 இந்தியர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் எனவும் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
ஹவுதி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அமீரக கப்பலில் இந்திய மாலுமிகள் சிக்கிக்கொண்ட விவகாரம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

மற்ற செய்திகள்
