அது ரொம்ப ரிஸ்க்.. கே.எல்.ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் கொடுக்க கூடாது.. கம்பீர் கொடுத்த விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் இருக்க கூடாது என கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியிலும், தென் ஆப்பிரிக்க அணி 2-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக அவருக்கு பதிலாக கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘கே.எல்.ராகுல் தொடக்க வீரராக மட்டுமே இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தொடக்க வீரராக களமிறங்குபவர் விக்கெட் கீப்பராக செயல்படக்கூடாது. விக்கெட் கீப்பர் சுமார் 150 ஓவர்களுக்கு களத்தில் இருப்பார். அதனை முடித்த உடனேயே தொடக்க வீரராக ஒருவரால் விளையாட முடியாது.
இது ஒருநாள் மட்டும் டி20 போன்ற போட்டிகளில் சாத்தியம். ஆனால் டெஸ்ட் போட்டிகள் போன்ற நீண்ட ஆட்டங்களுக்கு அது சரியாக இருக்காது. தொடக்க வீரர் மிகவும் துடிப்பாக முதல் பந்தில் இருந்து அணிக்கு நம்பிக்கை தர வேண்டும். விக்கெட் கீப்பிங் பணியை முடித்துவிட்டு வந்தால் அவரால் சுறுசுறுப்பாக விளையாட முடியாது. அதனால் தனியாக மிடில் ஆர்டரில் விளையாடு வீரர் தான் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும்’ என கம்பீர் அறிவுரை வழங்கினார்.