"நரகம்னு ஒன்னு இருந்தா அது அந்த தீவுதான்".. 45 வருஷமா மனிதர்களே இல்லாமல் தனித்து விடப்பட்ட பயங்கர தீவு.. அதிரவைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பானில் உள்ள ஹாஷிமா தீவு இன்னும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படும் இடங்களில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அதன் பயங்கரமான வரலாறு தான் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
Also Read | நிலவுல இருக்கும் மர்ம குகை... ஆய்வு செஞ்சப்போ தெரியவந்த உண்மை.. சந்தோஷத்தில் நாசா ஆராய்ச்சியாளர்கள்..!
உலகில் ஒரு நாடு அதிக வளர்ச்சியை பெறும்போது, அதே காலகட்டத்தில் பூமியில் உள்ள மற்றொரு நாடு கடும் சங்கடங்களை சந்தித்திருக்கும். இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது ஹாஷிமா நகரம். ஜப்பானின் நாகசாகி நகரத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்த தீவு நகரம் பயங்கரமான வரலாற்றை தன்னிடத்தே கொண்டிருக்கிறது.
நிலக்கரி
18 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் ஹாஷிமா தீவுக்கு அருகில் உள்ள டகாஷிமா என்னும் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் கப்பல்கள் பெரும்பாலும் நீராவி மூலமாகவே இயக்கப்பட்டு வந்தன. இதற்கு ஏகப்பட்ட நிலக்கரி தேவை. நாகசாகி நகர துறைமுகம் வாளர்ச்சியடைந்த காலத்தில் இந்த தீவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சுரங்கத்தில் பணிபுரிய கொரியாவில் இருந்து அடிமைகள் வரவழைக்கப்பட்டனர்.
20 மணி நேரங்கள் தொடர்ந்து உழைத்த அடிமைகளால் நாகசாகி நகரம் செல்வத்தின் உச்சத்துக்கு சென்றது. அப்படி நிலக்கரி சுரங்கத்துக்காக வரவழைக்கப்பட்ட அடிமைகளுக்காக கட்டப்பட்டது தான் இந்த ஹாஷிமா தீவு. மணல் மேடாக இருந்த இந்த தீவில் அடிமைகளுக்கு தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டன. இங்கிருந்து அவர்களால் எளிதில் தப்பிக்கவும் முடியாது. ஏனென்றால் அங்கிருந்து ஜப்பானுக்கு செல்ல வேண்டுமென்றால் பல கிலோமீட்டருக்கு நீந்தித்தான் செல்லவேண்டும். இங்கு தங்கியிருந்தவர்களுக்கு குறைவான அளவிலேயே உணவு அளிக்கப்பட்டிருக்கிறது. சுரங்கத்தில் நிகழும் மரணங்கள், பசியால், சுகாதார பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் என இந்த தீவு பல கருப்பு பக்கங்களை கொண்டிருக்கிறது.
கைவிடல்
இந்த தீவில் 1916 ஆம் ஆண்டிலேயே 7 மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டன. பள்ளிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் என பல வசதிகள் நிறுவப்பட்டாலும் அவை அனைத்துமே ஜப்பான் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இங்கிருந்து தப்பிக்க முடிவெடுத்து கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இறுதியாக நிலக்கரி தேவை குறைந்து மாற்று எரிபொருள் பக்கம் நாடுகள் திரும்பவே இந்த தீவு கைவிடப்பட்டிருக்கிறது. அதாவது 1974 ஆம் ஆண்டு இங்கிருந்த மனிதர்கள் முழுவதுமாக வெளியேறியுள்ளனர்.
நரகம்
கடல் அரிப்பினால் இங்கிருக்கும் கட்டிடங்கள் பாழடைந்து பார்க்கவே அச்சமூட்டும் வகையில் இருக்கின்றன. இந்த தீவில் அடிமையாக இருந்த கிம் ஹுங் என்பவர் இதுபற்றி பேசுகையில்,"நான் அந்த தீவை பற்றி நினைக்கவே விரும்பவில்லை. உலகில் நரகம் என ஒன்று இருந்தால் அது அந்த தீவு தான். எனது நண்பர்கள் பலர் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயற்சித்து உயிரிழந்தனர். ஆனால், இந்த தீவில் இருந்து உயிர்வாழ்வதை விட இறப்பதே மேல்" என்கிறார் உருக்கமாக.
இந்த தீவினை பாரம்பரிய இடமாக அறிவிக்கவேண்டும் என UNESCO-வுக்கு 2009 ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தது ஜப்பான். ஆனால், அது தங்களது மூதாதையரின் கண்ணீரை சுமந்த இடம் எனக்கூறி தென்கொரியா அதனை எதிர்த்தது. இறுதியாக 2015 ஆம் ஆண்டு UNESCO இந்த தீவை பாரம்பரிய இடமாக அறிவித்தது.