ஒரே ஒரு டிரைவ்.. 4.5 லட்சம் பேரின் தகவல்.. தொலைந்து போன டேட்டா.. அதிர வைத்த ஊழியர்
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், மக்கள் அனைவரையும் ஒரு பாடு படுத்தி இருந்தது.

ஏராளமான மக்கள் இந்த கொரோனா தொற்று மூலம் பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்திருந்தனர்.
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலான போதும் முழுமையாக இன்னும் கொரோனா தொற்று ஒழிக்கப்படவில்லை.
கொரோனா நிவாரண பணிகள்..
அதே வேளையில், இந்த கொரோனா தொற்று மூலம் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரைத் துடைக்க அனைத்து உலக நாடுகளின் அரசுகளும் நிவாரணத் தொகை உள்ளிட்ட பல உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், மேற்கு ஜப்பானில் உள்ள அமகாசாகி என்னும் பகுதியில் உள்ள வீடுகளில், கொரோனா நிவாரணம் வழங்கி வருவதை பார்வையிட வேண்டி, தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
காணாமல் போன டிரைவ்..
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அந்த நபர் செய்த காரியம் ஒன்று, அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது. அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன் நகர அலுவலகத்திலிருந்து பொதுமக்களின் தகவல்கள் அடங்கிய டேட்டாவை மாற்ற மெமரி ஸ்டிக் டிரைவ் ஒன்றில் சேகரித்து எடுத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியில், தனது சக ஊழியர்களுடன் சேர்ந்து மதுபான விடுதி ஒன்றிற்கும், அந்த நபர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு அளவுக்கு அதிகமாக அந்த நபர் மது அருந்தவே, போதையும் அளவுக்கு அதிகமாக தலைக்கு ஏறி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வீட்டிற்கு செல்லும் வழியில், சாலையில் படுத்து கிடந்த அவர், அதிகாலையில் எழுந்து வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் பின்னர் தன்னிடம் இருந்த டிரைவ், தொலைந்து போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதிர்ச்சியில் அமகாசாகி மக்கள்
அந்த நபர் தொலைத்த டிரைவில், அமகாசாகி மக்கள் 4 லட்சத்து 60 ஆயிரம் பேரின் பெயர்கள், முகவரி மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட பல தகவல்கள், அதில் அடங்கி உள்ளது.
இது தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நம்பிக்கையை காயப்படுத்தியதற்கு தாங்கள் மிகவும் வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். அதே போல, டிரைவ் காணாமல் போனது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றது. மேலும், பொது மக்களின் பெர்சனல் தகவல்கள் அடங்கிய டிரைவை பொது வெளியில் பாதுகாப்பு இல்லாமல் கொண்டு சென்றதற்கு அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மற்ற செய்திகள்
