ஜப்பானை தொடர்ந்து இந்தியாவிலும் இரவு நிலநடுக்கம்.. வானிலை மையம் வெளியிட்ட தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜப்பானை தொடர்ந்து இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பான்
ஜப்பான் நாட்டின் ஃபுக்குஷிமா அருகே நேற்றிரவு கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஃபுக்குஷிமாவின் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் சுமார் 20 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.
நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே நிலநடுக்கம் நடந்த பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனை அடுத்து நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஜப்பான் நாட்டு விமானப்படை ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 வருசத்துக்கு முன்பு
கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானின் ஃபுக்குஷிமா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல உயிரிழப்புகளை அந்நாடு சந்தித்தது. இந்த சூழலில் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நிலநடுக்கம்
இந்த நிலையில், இந்தியாவின் லடாக் பகுதியிலும் நேற்றிரவு சுமார் 7.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அது சில விநாடிகள் வரை நீடித்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பூமி மட்டத்தில் இருந்து 110 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.