‘ஐயா… பாலத்த காணோமுங்க…’- வடிவேலு காமெடி பாணியில் அமெரிக்காவில் நடந்த திருட்டு சம்பவம்
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில், ஒரு கும்பல், 58 அடி நீளம் கொண்ட மொத்தப் பாலத்தையும் திருடியுள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் போலீஸை கதிகலங்க வைத்துள்ளது. ஒஹையோ மாகாணத்தின் ஏக்ரோன் என்னும் பகுதியில் 58 அடி நீளம் கொண்ட அந்தப் பாலம் அமைந்துள்ளது. திருடப்பட்ட அந்தப் பாலமானது கடந்த 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது.
ஒஹையோ மாகாணத்தின் புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ், இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. பின்னர் அதை வேறு ஒரு திட்டத்தில் பயன்படுத்தும் நோக்கில் வெறுமனே வைத்துள்ளார்கள். இதை சில ‘கில்லாடி’ திருடர்கள் நோட்டமிட்டு, களவாட திட்டம் போட்டு வெற்றி கண்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படியான திருட்டு சம்பவத்தால் திக்கு முக்காடி போயுள்ள உள்ளூர் போலீஸ் தரப்பு, "இவ்வளவு பெரிய ஒரு கட்டுமானத்தை திருடியுள்ளது இதுவே முதல் முறை. எங்கள் வாழ்க்கையில் இதைப் போன்ற விசித்திரமான திருட்டை நாங்கள் பார்த்ததே இல்லை.
திருடபட்ட பாலமானது 58 அடி நீளம், 10 அடி அகலம் மற்றும் 6 அடி உயரம் கொண்டது. இதை யார் திருடினார்கள், ஏன் திருடினார்கள் என்கிற கேள்வி உங்களைப் போல எங்களுக்கும் வியப்பாகத் தான் உள்ளது.
இதில் மிகப் பெரிய விசித்திரம் என்னவென்றால், அந்தப் பாலமானது பாலிமர் பொருளில் உருவாக்கப்பட்டது. அதை அவர்கள் மீண்டும் பயன்படுத்தவோ, பழைய இரும்புக் கடையில் விற்கவோ முடியாது. அது பெரிதாக யாருக்கும் பயன்படாத பொருளாகத் தான் இருக்கும்" என்று கூறி அதிர்ச்சி கிளப்புகிறார்.
திருடப்பட்ட பாலத்தின் மொத்த மதிப்பு, சுமார் 40 ஆயிரம் டாலர் என்று கூறப்படுகிறது. இதுவரை போலீஸ் விசாரணையில் எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை. இதனால் பிரச்சனை மேலும் சிக்கலாகி உள்ளது. உள்ளூர்காரர்களுக்கு கண்டிப்பாக இந்த திருட்டு சம்பந்தமான எதாவது ஒரு விஷயம் தெரியவரும் என்றும், அப்போது அவர்கள் கொடுக்கும் விபரங்களை வைத்து திருடர்களை மடக்கிப் பிடித்து விடலாம் என்றும் போலீஸ் தரப்பு கணக்குப் போட்டு வருகிறது.
போலீஸ் தரப்பு இந்த விசித்திர திருட்டு பற்றி மேலும் கூறுகையில், ‘இந்தப் பாலத்தைத் திருடியவர்கள், இதனை விற்று மிகப் பெரிய தொகை பார்க்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால், திருடி முடித்தப் பின்னர் தான் இதற்கு எந்த வித மதிப்பும் இல்லை என்று அறிய நேர்ந்திருக்கலாம். இப்போது அவர்கள் என்ன செய்வது என்று புரியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது’ என்கின்றனர்.