"இவ்வளவு வருஷமா தண்ணிக்குள்ள தான் இந்த கிராமமே இருந்திருக்கு".. வரலாறு காணாத வறட்சியால் வெளியே வந்த பழமையான சர்ச்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் வருடக்கணக்கில் தண்ணீரில் மூழ்கியிருந்த பழங்கால கிராமம் தற்போது வெளியே தலைகாட்ட துவங்கியிருக்கிறது. இதனை உள்ளூர் மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.
வெப்ப அலை
ஐரோப்பா முழுவதும் வெப்ப அலையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். வெப்பத்தினை தவிர்க்க அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரிட்டனில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி ஏற்பட்டிருக்கிறது. முக்கிய நீர்நிலைகளில் நீர்ப்பிடிப்பின் அளவு கணிசமான அளவில் குறைந்திருக்கிறது. மேலும், காட்டுத்தீ போன்ற பேரிடர்கள் அரசுக்கு நெருக்கடி அளித்து வருகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்தில் அமைந்துள்ள லேடிபோவர் நீர்த்தேக்கத்தில் நீர்ப்பிடிப்பின் அளவு கணிசமாக குறைந்திருக்கிறது. இதனால் பல வருடங்களுக்கு முன்னர் நீருக்குள் மூழ்கிப்போன கிராமம் மற்றும் சர்ச் ஒன்றின் சிதலமடைந்த பாகங்கள் வெளியே தெரியத்துவங்கியுள்ளன.
லேடிபோவர் நீர்த்தேக்கம்
1940 களில் இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருக்கிறது. ஷெஃபீல்ட், டெர்பி, நாட்டிங்ஹாம் மற்றும் லெய்செஸ்டர் ஆகிய மாகாணங்களுக்கு இந்த நீர்த்தேக்கம் நீர் ஆதரமாக திகழ்கிறது. இந்த அணை கட்டப்பட்ட போது, நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்திருந்த ஆஷாப்டன் எனும் கிராமம் நீருக்குள் மூழ்கும் என கணிக்கப்பட்டது. அதனால் 1938 வாக்கில் இங்கு வசித்துவந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 23 ஆண்டுகள் நீடித்த இந்த நீர்த்தேக்க கட்டுமான பணிகள் 1961 ஆம் ஆண்டு நிறைவடைந்தன.
சொன்னபடியே ஆஷாப்டன் கிராமம் தண்ணீருக்குள் மூழ்கியது. இந்த கிராமத்தில் பழங்கால தேவாலயம் ஒன்றும் இருந்திருக்கிறது. தற்போது இந்த நீர்த்தேக்கத்தில் அதன் மொத்த கொள்ளளவில் 54 சதவீத நீர் மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாக இந்த சர்ச்சின் சிதலங்கள் வெளியே தெரியத் துவங்கியுள்ளன.
இரும்பு
இதுகுறித்து பேசிய உள்ளூர் சுற்றுலாவாசி ஒருவர்," உண்மையில் தண்ணீரின் அளவை பார்த்ததும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். கிராமத்தின் பழங்கால சில பொருட்கள் மண்ணில் கிடப்பதை நாங்கள் பார்த்தோம். ஓரிரண்டு இரும்பு துண்டுகளை கண்டுபிடித்திருக்கிறோம். அது பழங்கால சர்ச்சில் இருந்ததாக இருக்கலாம்" என்றார். இதனிடையே இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | ஆளே இல்லாத தீவு.. ஆனா Hi Tech வசதிகள்.. சுற்றுலாவாசிகளை சுண்டி இழுக்கும் குட்டித்தீவு..!