'ஆண் மாணவர்கள் அதிக பெண் தன்மையுடன் இருக்காங்க'... 'விவாதத்தை கிளப்பிய சுற்றறிக்கை'... கொந்தளித்த நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்இளம் வயது ஆண் மாணவர்கள் அதிக பெண் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என கல்வித் துறை அமைச்சகத்திடமிருந்து வந்த ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்ததை அடுத்து, அந்த அறிவிப்பு இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சீனாவின் பெரும்பாலான ஆண் முன் மாதிரிகள், வலுவானவர்களாக, ராணுவ ஹீரோக்களைப் போல இல்லை என, சீன அரசு கடந்த சில காலமாகவே தன் எண்ணத்தை வெளிக்காட்டி வந்தது.
கால்பந்தாட்டத்தின் மிகப் பெரிய அபிமானியான சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங் கூட, சீனாவில் நல்ல விளையாட்டு உச்ச நட்சத்திரங்களையும் ஆளுமைகளையும் உருவாக்க நீண்ட காலமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
அதன் வெளிப்பாடாக கடந்த வாரம், சீனாவின் கல்வி அமைச்சகத்திலிருந்து ஒர் அறிக்கை வந்தது. அதன் தலைப்பே சீனாவின் இலக்கை வெளிப்படுத்துவதாக இருந்தது.
The Proposal to Prevent the Feminisation of Male Adolescents என்கிற தலைப்புடன் வெளியான அவ்வறிக்கை, சீன பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் உடற்கல்விப் பாடத் திட்டங்கள் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதைப் பள்ளிக் கூடங்கள் வலுப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுப் பின்புலம் கொண்டவர்களை தேர்வு செய்யும் படியும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு சீன மாணவர்களிடம் ஆண் தன்மையை அதிகப்படுத்தும் நோக்குடன் கால்பந்து போன்ற விளையாட்டுகளை அதிவேகமாக மேம்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இப்படி ஒர் அறிக்கை சீனாவிடம் இருந்து வரலாம் என்பதற்கான சில சமிக்ஞைகள் சமீப காலங்களில் பார்க்க முடிந்தது. பல சீன இளைஞர்கள் பலவீனமானவர்களாகவும், பயந்த சுபாவம் கொண்டவர்களாகவும், மென்மையானவர்களாகவும் இருப்பதாக, கடந்த மே மாதம் சீனாவின் முக்கிய ஆலோசனைக் குழுவை சேர்ந்த ஷி சிஃபு தெரிவித்திருந்தார்.
சீன கல்வி அமைச்சகத்திடமிருந்து இப்படி ஒரு அறிக்கை வந்த பின், சீன சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக தங்கள் விமர்சனங்களையும், தங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
"'Feminisation' என்பது அத்தனை மோசமான சொல்லா என்ன?" என வைபோ (Weibo) பயனர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு 2,00,000-க்கும் அதிகமான லைக்குகள் குவிந்திருக்கின்றன.
"ஆண்களும் மனிதர்கள் தான்.... உணர்வுப் பூர்வமாக இருப்பது, மென்மையாக நடந்து கொள்வது எல்லாமே மனிதர்களின் குணநலன்கள் தான்" என மற்றொரு வைபோ பயனர் பதிவிட்டிருந்தார்.
"சீனாவில் பெண்களை விட ஏழு கோடி ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள். எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு பாலின விகிதம் மோசமாக இல்லை. இந்த ஆண் தன்மை போதாதா?" என மற்றொருவர் பதிவு செய்திருந்தார்.
இப்படி சீனாவின் கல்வி அமைச்சகத்தின் அறிக்கைக்கு சீனர்கள் சமூக வலைதளம் மூலம் தங்கள் கோபத்தையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.