XI JINPING : சாதனை படைத்த சீன அதிபர்.. உட்சபட்ச அதிகாரத்தில் ஜி ஜின்பிங் .. முழு தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதன்மூலம், மூன்றாவது முறையாக அந்நாட்டின் அதிபராகி உள்ளார் அவர்.
ஜி ஜின்பிங்
கடந்த 1953 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜி ஜின்பிங். இவருடைய தந்தை ஸீ ஸாங்க் ஷ்வான். சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்த மா சே தூங்கின் நண்பரான ஸீ ஸாங்க் ஷ்வான் சிறுவயதிலேயே தீவிர அரசியலில் இயங்கி வந்தவர். அவரை தனது வழிகாட்டியாக கொண்ட ஜி ஜின்பிங் கடந்த 2012 ஆம் ஆண்டு சீனாவின் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடைய பதவிக்காலம் நேற்று முடிவடைந்தது. இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் மாநாட்டில் அவர் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் அதிபராகியுள்ளார்.
மாநாடு
சீனாவில் ஒற்றை ஆட்சி முறையை நிலவி வருகிறது. அதன்படி அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அதிபராகவும் நியமிக்கப்படுவார். இந்நிலையில் கடந்த வார ஞாயிற்றுக்கிழமை, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் துவங்கிய மாநாடு, நேற்று நிறைவடைந்தது. இதில் அந்த கட்சியை சேர்ந்த 2300 பேர் கலந்துகொண்டனர்.
இதில் சென்ட்ரல் கமிட்டியை சேர்ந்த உறுப்பினர்கள் 25 பொலிட் பியூரோ உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தனர். மேலும், மற்றொரு அமைப்பான ஸ்டாண்டிங் கமிட்டியின் தலைவராக 69 வயதான ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல, கட்சியின் பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர் மூன்றாவது முறையாக அதிபராகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போராடத் துணிவோம்
முன்னதாக சீன சட்டத்தின்படி ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும். இதனை ஜி ஜின்பிங் மாற்றியமைத்தார். இதன்மூலம், தற்போது மூன்றாம் முறையாக அவர் சீனாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
மாநாடு முடிந்த நிலையில் உறுப்பினர்களிடம் பேசிய ஜின்பிங்," போராடத் துணிவோம், வெல்லத் துணிவோம், கடினமாக உழைக்க வேண்டும். தொடர்ந்து முன்னேறுவதில் உறுதியாக இருங்கள் " என்றார். தொடர்ந்து பேசிய அவர்," உலக நாடுகளின் உதவி இல்லாமல் சீனாவின் வளர்ச்சி சாத்தியமில்லை. அதேபோல உலக நாடுகளுக்கும் சீனா தேவை. மக்கள் மற்றும் கட்சியினர் எங்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பற்றுவோம்" என்றார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், சீனாவின் மிகப்பெரும் அரசியல் தலைவருமாக திகழ்ந்த மா சே துங்-ற்கு பிறகு மக்களிடையே மிகப்பெரிய அரசியல் தலைவராக உருவெடுத்திருக்கிறார் ஜி ஜின்பிங்.