20 வருஷமா தலைவலி வராத நாளே இல்ல.. டெஸ்ட் பண்ணி பார்த்தப்போ.. தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை
முகப்பு > செய்திகள் > உலகம்சீனா: சுமார் 20 ஆண்டுகளாக தலையில் புல்லட்டுடன் வாழ்ந்து வந்த நபர் ஒரு தலைவலியால் மீண்டு வந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

தலைவலி என்பது நம்மில் பலருக்கு வருவதுண்டு. ஆனால் ஒருவர் சுமார் 20 ஆண்டு காலம் தலைவலியோடு வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், சீனாவை சேர்ந்த நபருக்கு கிட்டத்தட்ட இருபது ஆண்டு காலம் தினமும் தலைவலி வருமாம். ஏன் எதற்கு என்று கூட தெரியாதாம்.
மருத்துவ பரிசோதனை:
நன்றாக தூங்கி எழுந்தாலும் கூட அவருக்கு தலைவலி என்பது இருந்து கொண்டே இருக்குமாம். வாழ்க்கையே வெறுத்து போக கடைசியில சில நாட்களுக்கு முன் ஒரு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு மட்டுமல்ல அந்த மருத்துவ குழுக்கே ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்துள்ளது.
ஏனென்றால் அவர் எடுத்த எம்ஆர்ஐ ஸ்கேனில், அவரது மண்டை ஓட்டில் புல்லட் ஒன்று சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளளது. இதில் ஆச்சரியம் என்ன என்றால், தனது தலையில் புல்லட் எப்படி வந்தது என்பது கூட அவருக்கு தெரியவில்லை.
புல்லட் பாய்ந்திருக்க கூடும்:
அதோடு பல மணிநேர யோசனைக்கு பிறகு, தனக்கு 8 வயது இருந்தபோது, தன்னுடைய சகோதரரும், தானும் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவர் பயன்படுத்திய ஏர்கன் மூலமாக இந்த புல்லட் பாய்ந்திருக்க கூடும் எனவும் குத்துமதிப்பாக தெரிவித்துள்ளார்.
அதோடு அப்போது தனக்கு காயம் ஏற்பட்து, தலை வலித்தது ஞாபகம் இருக்கிறது எனவும், ஆனால், தலை முடியை வைத்து மறைத்து தனது பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை கேட்ட மருத்துவ குழு ஒரு மனிதர் இத்தனை வருடம் அதுவும் தலையில் குண்டுடன் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
எப்படி உயிர் வாழ்ந்தார்?
இதுகுறித்து மருத்துவக்குழு கூறும் போது, 'சம்மந்தபட்ட நோயாளியின் தலையில் சுமார் 0.5 செ.மீ முதல் 1 செ.மீ. அளவு கொண்ட புல்லட் இருந்தது. இவர் இவ்வளவு நாட்களாக இந்த புல்லட்டுடன் எப்படி உயிர் வாழ்ந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும், புல்லட் மண்டை ஓட்டை தாண்டி உள்ளே இறங்காமல், வெளிப்புறத்திலேயே இருந்ததால், இவருக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லாமல் இருந்திருக்க கூடும்' எனக் கூறியுள்ளனர்.
மேலும், 'பொதுமக்கள் யாராயினும் லேசான தலைவலி என்றால், அதுவும் எப்போதாவது வந்தால் சுயமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு கடந்து செல்வதில் ஒரு ஆபத்தும் இல்லை. ஆனால், நாள்பட்ட தலைவலி இருந்தால் அதை ஒதுக்கக்கூடாது. கட்டாயம், உரிய மருத்துவ பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்' எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மற்ற செய்திகள்
