ஆறே நாளில் 6000 பெட் .. அவசர அவசரமாக மருத்துவமனை கட்டும் சீனா.. வேகமெடுக்கும் புதிய வைரஸ் காரணமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
சீனா
சீனாவின் யூகான்ன் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
புதிய வகை கொரோனா வைரல்
இந்த நிலையில் சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று ஒருநாள் மற்றும் 2,300 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஊரடங்கு
அந்த வகையில் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள யூசெங், ஜில்லின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் ஆகிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவை இல்லாமல் மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாதிரி சேகரிப்பு
இதுகுறித்து தெரிவித்த ஜில்லியின் மாகாண சுகாதாரத்துறை அதிகாரி, ‘புதிய திரிபான இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆரம்பகட்டத்திலேயே இதைக் கண்டறிய மிகவும் கடினமாக உள்ளது. தற்போது வீடு வீடாக சென்று மாதிரிகளை சேகரித்து வருகிறோம்’ எனக் கூறியுள்ளார்.
பிரமாண்ட மருத்துவமனை
இந்த சூழலில் ஜில்லின் நகரில் 6000 படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனையை 6 நாளில் கட்டி முடிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 3 மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு நோயாளிகள் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.