'கொரோனாவை தொடர்ந்து'... 'சீனாவிலிருந்து பரவும் புதிய வைரஸ்'... 'பாதிப்பு அபாயத்தில் உள்ள இந்தியா'... 'ICMR எச்சரிக்கை!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாசீனாவிலிருந்து கேட் கியூ என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவிவருவதாக ஐசிஎம்ஆர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் கடந்த 10 மாதங்களாக உறைய வைத்துள்ளது. கோடிக்கணக்கானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பல நாடுகளிலும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இந்தியாவில் புதிய வைரஸ் ஒன்று பரவிவருவது கண்டறியப்பட்டுள்ளது. கேட் கியூ என்ற இந்த புதிய வைரஸ் இந்தியாவில் பரவியுள்ளதாக புனேவில் உள்ள ஐசிஎம்ஆரின் வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுதும் இருந்து பெறப்பட்ட 833 ரத்த மாதிரிகளில் கர்நாடகாவைச் சேர்ந்த இருவரின் மாதிரிகளில் இந்த வைரஸுக்கான ஆன்டிபாடீஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ் சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளிலேயே பெருமளவு காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் பன்றி, மைனா உள்ளிட்ட உயிரினங்களிடமும் இது காணப்படுவதால் பொது மக்கள் இந்தத் தொற்றுக்கு அதிகளவில் ஆளாகும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது. 3 விதமான கொசுக்கள் மூலம் இது மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.