'மனித உயிர்கள் உட்பட... எத்தனை ஆயிரம் பறவைகள்?.. எத்தனை லட்சம் மரங்கள்?.. எல்லாமே போச்சு'!.. அமெரிக்காவில் ஆரம்பித்த பெரு நெருப்பு... கனடாவையும் புரட்டிப் போட்டது!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பற்றிய காட்டுத் தீ, தற்போது அண்டை நாடானா கனடாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நெருப்பால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிபர் டிரம்ப் இன்று பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை அழித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகளையும் சாம்பலாக்கியுள்ளது. இப்பகுதியில் மட்டும் பெருநெருப்பின் காரணமாக 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ஒரேகான் மாகாணத்தில் தீக்கிரையான ஆயிரக்கணக்கான வீடுகளில் யாரும் உள்ளனரா என தீயணைப்பு வீரர்களும், மீட்புப் படையினரும் தேடி வருகின்றனர். ஒரேகானில் மட்டும் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. வேகமாக வீசும் காற்றின் காரணமாக இரு மாகாணங்களிலும் நெருப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. இதை அணைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
நெருப்பினால் ஏற்பட்ட சாம்பல் தூசும், புகை மண்டலமும் சான்பிரான்சிஸ்கோ, லாஸ்ஏஞ்சலிஸ் உள்ளிட்ட நகரங்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. கடும் புகை காரணமாக பெரும்பலான இடங்களில் வானம் ஆரஞ்சு நிறமாகவே காட்சியளித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி காட்டு தீ காரணமாக ஒரேகான் மாகாணத்தில் மட்டும் 4 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலம் பாழ்பட்டுப் போனது. இப்பகுதியில், ஏற்கனவே 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 லட்சம் மக்கள் வெளியேறுமாறு மாகாண நிர்வாகம் நிர்பந்தித்து வருகிறது.
புகை காரணமாக போர்ட்லேண்டில் காற்றின் தரம் உலகின் முக்கிய நகரங்களில் உள்ளதை விட மோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏனைய பகுதிகளில் இருந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கலிபோர்னியாவில் பெரு நெருப்பினால் ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிட அதிபர் டிரம்ப் இன்று அப்பகுதிகளுக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கலிபோர்னியாவில் தொடங்கிய காட்டுத் தீ ஒரேகான், வாஷிங்டன் என பரவி வருவதால் ஏற்பட்ட புகை மூட்டம் கனடாவின் வான்கூவர் நகரிலும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், பிரிட்டிஷ் கொலம்பியா பகுதி நெருப்பினால் சூழப்படும் அதிக ஆபத்தில் இருப்பதாக கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.