"பத்தே நிமிஷம் தான்".. யாரும் பாக்கலைன்னு பார்சலை திருடிய ஆசாமி.. உரிமையாளர் அனுப்பிய மெசேஜை பாத்துட்டு வெலவெலத்துப்போன திருடன்..
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் பார்சலை திருடியவரே அதனை திரும்பி உரிமையாளரிடம் ஒப்படைத்திருக்கிறார். இதற்கு காரணமாக இருந்திருக்கிறது ஒரு மெசேஜ்.
இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியான பிரிஸ்டலை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் மூலமாக டேபிள் ஃபேன் ஒன்றை வாங்கியுள்ளார். ஆர்டர் போட்ட கொஞ்ச நாளிலேயே அவரது வீட்டுக்கு அந்த ஃபேன் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. வீட்டின் வாசலில் பார்சலை வைத்துவிட்டு சென்றிருக்கிறார் டெலிவரி ஊழியர். அப்போது அந்த வழியாக சென்ற லீ சார்கோசி என்பவர் அந்த பார்சலை பார்த்திருக்கிறார். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை நோட்டம்விட்ட அவர் அந்த பார்சலை தூக்கிச் சென்றிருக்கிறார்.
மெசேஜ்
அந்த பார்சலுடன் தனது வீட்டுக்கு சென்றிருக்கிறார் சார்கோசி. அதே நாளில் அவருடைய செல்போனுக்கு மெசேஜ் ஒன்று வந்திருக்கிறது. பார்சலின் உரிமையாளர் அனுப்பிய அந்த மெசேஜில்,"உங்கள் பெயரையும் முகவரியையும் பெற எனக்கு 10 நிமிடம் ஆனது. இன்று நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு பார்சலுக்கும் ஒரு விரலை எடுக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். விரைவில் சந்திப்போம்." என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கண்ட சார்கோசி அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
இதனையடுத்து தான் செய்ததற்கு மன்னிப்பு கேட்டு, அந்த பார்சலை திரும்ப கொடுத்துவிடுவதாகவும் மேலும், இழப்பீடாக 50 யூரோக்களை அளிப்பதாகவும் மெசேஜ் அனுப்பியிருக்கிறார் சார்கோசி. சொன்னபடியே பார்சலை உரிமையாளரிடம் திரும்ப கொடுத்திருக்கிறார்.
கைது
இதனிடையே சார்கோசி தனது பார்சலை எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகளை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார் பார்சலின் உரிமையாளர். மேலும், அவர் காவல்துறையில் இதுகுறித்து புகாரும் அளித்திருக்கிறார். உடனடியாக காவல்துறையினர் சார்கோசியை கைது செய்துள்ளனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சார்கோசிக்கு 2 வருடங்கள் மற்றும் 5 மாதங்கள் சிறைத்தண்டனை அளிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.
சார்கோசி மீது 2000 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் திருட்டு வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இதில் தண்டனை 24 வாரம் மீதியிருந்த வேளையில் அவர் முன்னர் விடுதலை செய்யப்பட்ட்டிருந்தார். தற்போது அவர்மீது மீண்டும் வழக்கு பதிவானதால் பழைய தண்டனையையும் சேர்த்து சிறைத்தண்டனை அனுபவிக்கும்படி உத்திரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.