மக்கள் யாருமே வசிக்காத நகரம்.. கீழே இருந்த ரகசிய சுரங்க பாதை.. வெளிச்சத்துக்கு வந்த 2000 வருஷ மர்மம்..
முகப்பு > செய்திகள் > உலகம்எகிப்து நாட்டில் சுமார் 2000 ஆண்டு பழமையான சுரங்க பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இது பல்வேறு கேள்விகளை ஆராய்ச்சியாளர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

எகிப்து நாட்டின் பண்டைய நகரங்களில் ஒன்று தபோசிரிஸ் மேக்னா. இது கிமு 280 மற்றும் 270 க்கு இடையில் பார்வோன் டோலமி II பிலடெல்பஸால் நிறுவப்பட்டதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். தற்போது அலெக்ஸ்சாண்ட்ரியா மாகாணத்தில் அமைந்திருக்கும் இந்த பகுதியில் மக்கள் யாரும் வசிப்பது இல்லை. இருப்பினும் வரலாற்றில் ஒருகாலத்தில் கோலோச்சிய நகரமான தபோசிரிஸ் மேக்னாவில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தான் பூமிக்கு அடியே சுரங்க பாதை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கிமு 332 இல் அலெக்சாண்டர் எகிப்தைக் கைப்பற்றி அலெக்ஸாண்டிரியாவை நிறுவிய பிறகு இது ஒரு பெரிய கலாச்சார மற்றும் மத மையமாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஆய்வு செய்ய டாக்டர். கேத்லீன் மார்டினெஸ் தலைமையிலான சான் டொமிங்கோ பல்கலைக்கழகத்தின் எகிப்திய டொமினிகன் தொல்பொருள் குழு களத்தில் இறங்கியது. இதற்கான வேலைகள் நடைபெற்று வந்த வேளையில் தான் 13 மீட்டர் (43 அடி) ஆழத்தில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சுரங்க பாதை 4,800 அடிகள் நீளம் கொண்டதாக தெரிவித்திருக்கும் ஆராச்சியாளர்கள், இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டவையாக இருக்கக்கூடும் என கணித்திருக்கின்றனர். இதில் இன்னொரு சந்தேகமும் எழுந்திருக்கிறது. அதாவது, இந்த சுரங்க பாதை எகிப்தின் பாரோவான கிளியோபாட்ராவின் கல்லறைக்கு செல்லும் வழியாக இருக்கலாம் எனவும் ஆராச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த சுரங்கத்தின் உள்ளே பல பீங்கான் பாத்திரங்கள் மற்றும் பானைகள் அலபாஸ்டரால் செய்யப்பட்ட தலைகள் ஆகியவை கிடைத்திருக்கின்றன. பழங்காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் காரணமாக இந்த சுரங்க பாதை கைவிடப்பட்டிருக்கலாம் என்பதே ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும், இதுகுறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த இடம் பற்றிய பல்வேறு தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
