ஆப்பிள் கம்பெனியின் அஸ்திவாரம்.. ஏலத்தில் அனைவரையும் திகைக்க வச்ச ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் பொக்கிஷம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் முதன் முதலில் உருவாக்கிய ஆப்பிள்-1 கணினியின் மாதிரி வடிவமைப்பு (prototype) ஏலத்தில் சுமார் 7 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி உள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸ்
டெக்னாலஜி உலகில் ஜாம்பவானாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தை 1970களில் தனது நண்பர் ஸ்டீவ் வோசினியாக்-உடன் இணைந்து துவங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். தொழில்நுட்பத்தின் மீது தீரா காதல் கொண்டவரான ஸ்டீவ் ஜாப்ஸ் ஒவ்வொரு வீட்டிலும் கணினியை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற லட்சிய கனவில் லயித்திருந்த நேரம். ஆப்பிள் என்ற சிறிய நிறுவனம் கணினிகளை உருவாக்கும் பணியில் துடிப்புடன் ஈடுபடத்துவங்குகிறது. அப்போது தனது நண்பர் ஸ்டீவ் வோசினியாக்-உடன் இணைந்து புதிய ஆப்பிள் -1 கணினிக்கான முன்மாதிரி வடிவமைப்பை உருவாக்குகிறார் ஜாப்ஸ்.
அதன்பின்னர் 1976 ஆம் ஆண்டு இந்த முன்மாதிரி வடிவத்தை தனிநபர் கணினி கடை உரிமையாளர் பால் டெரெல் என்பவரிடம் ஜாப்ஸ் காட்டியிருக்கிறார். இந்த முன்மாதிரி வடிவத்தை கண்டு ஆச்சர்யப்பட்ட பால், ஆப்பிள் என்னும் புதிய நிறுவனத்துக்கு பிசினஸ் வாய்ப்பை வழங்குகிறார். அதன்பிறகு நடந்தது அனைத்தையும் இந்த உலகம் நன்றாகவே அறியும். தொட்டதை எல்லாம் ஜெயித்துக் காட்டினார் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனம் உலக அளவில் தவிர்க்க முடியாத உயரத்துக்கு சென்றது.
ஏலம்
அப்படி ஆப்பிள் என்ற நிறுவனத்துக்கே அஸ்திவாரமாக அமைந்த இந்த ஆப்பிள் -1 கணினியின் முன்மாதிரி தான் இப்போது ஏலத்தில் விற்பனையாகி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் இந்த prototype-ஐ 677,196 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் 5.41 கோடி ரூபாய்) வாங்கியதாக இந்த ஏலத்தை நடத்திய பாஸ்டனை சேர்ந்த ஆர்ஆர் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
ஆர்ஆர் ஏல நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் பாபி லிவிங்ஸ்டன் இதுபற்றி பேசுகையில்,"இந்த போர்டு இல்லாமல் ஆப்பிள்-1 இல்லை. இது ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஆப்பிள் நினைவுச்சின்னங்களில் ஒன்று" என்றார்.
ஆன்லைன் மூலமாக நடைபெற்று வந்த இந்த ஏலத்தில் ஜூலை இறுதியில் அதிகபட்சமாக 278,005 டாலர்களுக்கு ஒருவர் ஏலம் கேட்டிருந்தார். ஆனால், இது அதிகமான தொகைக்கு ஏலம் போகலாம் என நிபுணர்கள் தெரிவித்துவந்த நிலையில் தற்போது இந்த ப்ரோட்டோடைப் சுமார் 7 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
