'காவல்துறையில் கம்பீரமாக பணிபுரிந்த ஆப்கான் பெண்!.. வேலைக்கு போன குற்றத்திற்காக... ஈவு இரக்கமற்ற தாலிபான்களின் கொடூரச் செயல்'!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்கள் பெண்களை எப்படி நடத்துவார்கள் என்பதை டெல்லியில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஆப்கானிய பெண் காவலர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 33 வயது நிரம்பிய பெண், கதேரா. தாலிபான்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளான அவர், தனது சிகிச்சைக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார்.
ஆப்கானிஸ்தானில் காவல்துறையில் பணியாற்றிய கதேரா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணி முடிந்து வீடு திரும்பியபோது தாலிபான்கள் அவரை வழிமறித்துள்ளனர்.
அப்போது அவரது அடையாள அட்டையை பார்த்த உடன் துப்பாக்கியால் தொடர்ச்சியாக சுட்டுள்ளனர். அத்தோடு கதேராவை கத்தியால் குத்தி கண்பார்வையை இழக்கச் செய்துள்ளனர். அந்த சமயத்தில் அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதேரா சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார்.
தற்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், இது தொடர்பாக நியூஸ் 18 ஊடகத்துக்கு பேட்டியளித்த கதேரா, "அவர்கள் முதலில் எங்களை (பெண்கள்) கொடுமைப்படுத்துவார்கள், பின்னர் தண்டனைக்கான எடுத்துக்காட்டாக எங்கள் உடல்களை வீசிவிட்டு செல்வார்கள்.
அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்த நான் அதிர்ஷ்டசாலி. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியின் கீழ் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் வாழ்வது நரகத்துக்கு ஒப்பானது" என்று கூறியுள்ளார். தாலிபான்களுக்கு அடிபணியவில்லை என்றால் பெண்களாக இருந்தாலும் யாராக இருந்தாலும் வீதிகளில் மரணத்தை சந்திப்பார்கள் என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க தாலிபான்கள் அனுமதிப்பதில்லை. அதேவேளையில், பெண்கள் படிக்கவும் பணியாற்றவும் கூட அவர்கள் அனுமதிப்பதில்லை" என அவர் விரக்தியின் உச்சத்தில் பதிவு செய்கிறார். மேலும் அவர் பேசுகையில், "பின்னர் பெண்கள் என்ன செய்ய முடியும், இறக்கவா முடியும்? குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு மட்டும்தான் பெண்கள் என்று நீங்கள் நினைத்தாலும், மருத்துவ வசதி இல்லாமல் எப்படி குழந்தை பெற்றுகொள்ள முடியும்" என்று கேள்வி எழுப்புகிறார்.
அதுமட்டுமின்றி, "கடந்த 20 ஆண்டுகளில் நாங்கள் என்ன உருவாக்கினோம் என்பதை கற்பனை செய்ய இந்த உலகத்திற்கு கடினமாக இருக்கும். நாங்கள் கனவுகளை உருவாக்கி இருந்தோம். தற்போது அவை கலைந்துவிட்டன. எங்களுக்கு அனைத்தும் முடிந்து விட்டது. நாட்டை கைப்பற்றுவதற்கு முன்பே, அரசாங்கத்தில் பணியாற்றும் பெண்கள், பெண் காவலர்கள் போன்றவர்கள் தாலிபான்களால் வேட்டையாடப்பட்டனர். தாலிபான்கள் இஸ்லாத்துக்கு கறை" என்றும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
