முதல் மனைவிக்கு நேர்ந்த பெரும் சோகம்.! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வேதனை பதிவு.. எப்படி நடந்தது.?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப் மறைவு, அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
செக் குடியரசில் பிறந்த இவானாவுக்கும், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கும், கடந்த 1977 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 15 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், 1992 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே விவாகரத்தும் ஆனது.
மேலும், டிரம்ப் - இவானா தம்பதிக்கு, டொனால்டு டிரம்ப் ஜூனியர், எரிக் ஆகிய இரண்டு மகன்களும், இவாங்கா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், டிரம்ப்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப், நியூயார்க்கில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக, நியூயார்க் நகர காவல் துறை அவசர உதவி எண்ணிற்கு வந்த அழைப்பின் பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, இவானா சுயநினைவின்றி கிடந்ததாகவும், பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது, ஏற்கனவே அவர் இறந்ததாகவும் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
73 வயதாகும் இவானாவின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அதே போல, படிக்கட்டுகளின் அருகே அவர் மயங்கி கிடந்ததால், படிக்கட்டில் இருந்து இறங்கும் போதோ, அல்லது ஏறும் போதோ கீழே விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
முதல் மனைவியின் மறைவு குறித்து டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "இவானா தனது நியூயார்க்கில் உள்ள இல்லத்தில் காலமானார். அவர் மிகவும் அற்புதமான, அழகான பெண். மிகவும் சிறந்த மற்றும் முன்னுதாரணமான வாழ்க்கையும் வாழ்ந்தவர். இவானாவின் பெருமையும், மகிழ்ச்சியும் டொனால்டு டிரம்ப் ஜூனியர், இவாங்கா மற்றும் எரிக் ஆகியோர் தான். இவானா தனது குழந்தைகளை நினைத்து மிகவும் பெருமை அடைந்தவர். இவானாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்" என டொனால்டு குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, தனது தாயின் மறைவுக்கு, டொனால்டு டிரம்ப் ஜூனியர், இவாங்கா மற்றும் எரிக் ஆகியோருடன் வருத்தத்துடன் தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.