ஆப்கான் பெண்களுக்கு ‘வித்தியாசமான’ கட்டுப்பாடு விதித்த தாலிபான்கள்.. சுதந்திரம் பறிபோகிறதா..? வலுக்கும் கண்டனம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு தாலிபான்கள் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு கண்டனங்களை பெற்று வருகிறது.

தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றின. இதனை அடுத்து அந்நாட்டில் பல்வேறு நடவடிக்கைகளை தாலிபான்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் தாலிபான் அரசு பெண்களுக்கு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், ‘45 மைல்களுக்கு (72 கிலோமீட்டர்) மேல் பயணம் செய்யும் பெண்கள், குடும்பத்தின் நெருங்கிய ஆண் உறவினர் இல்லாமல் செல்லக்கூடாது’ என ஆப்கானிஸ்தான் செய்தித் தொடர்பாளர் சதேக் அகிஃப் முஹாஜிர் கூறியுள்ளார்.
மேலும் தலையில் முக்காடு அணியாத பெண்களை வாகனங்களில் ஏற்ற அனுமதிக்கக்கூடாது என வாகன உரிமையாளர்களுக்கும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுத்துறை பணிகளில் வேலை பார்த்து வந்த பல பெண்கள், தற்போது வேலைக்கு திரும்புவதை தாலிபான்கள் அரசு தடுத்துள்ளது.
இந்த சூழலில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தாலிபான்களின் இந்த உத்தரவு பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்களிடமிருந்து கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.
இதுகுறித்து தெரிவித்த பெண்கள் உரிமைக்கான குழுவின் இணை இயக்குனர் ஹீதர் பார், ‘இந்த புதிய உத்தரவு பெண்களை கைதிகள் ஆக்கும் திசையில் நகருகிறது. இது பெண்களை சுதந்திரமாக நடமாடுவதற்கும், வேறு ஒரு நகரத்திற்கு செல்வதற்கும், வியாபாரம் அல்லது அவர்களுக்கு எதிரான வன்முறையில் இருந்து தப்பி செல்லும் வாய்ப்புகளையும் முடக்குகிறது’ என அவர் கூறியுள்ளார். தாலிபான்களின் இந்த அறிவிப்புக்கு பல பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

மற்ற செய்திகள்
